தூத்துக்குடி, அண்ணா பேருந்து நிலையத்தில் கோடிக்கணக்கில் கடை வாடகை பாக்கி., மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?

தூத்துக்குடி, அண்ணா பேருந்து நிலையத்தில் கோடிக்கணக்கில் கடை வாடகை பாக்கி., மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகங்களில் கோடிக்கணக்கில் கடை வாடகை நிலுவையில் இருப்பதாக கூறப்படும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாநகரில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சி மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் பல கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், சில கடைகள் வாடகைதாரர்களால் மீண்டும் மாநகராட்சி இடமே  ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆரம்பம் முதலே இந்த வணிக வளாகம் பராமரிப்பு மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது செயல்பட்டு வரும் கடைகளில் பலர் பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருப்பதுடன், சிலர் நீண்டகாலமாக நிலுவைத் தொகையை கூட செலுத்தாமல் இருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலுவைத் தொகையை வசூலிப்பதில் மாநகராட்சி நிர்வாகமும் போதிய தீவிரம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், சில கடை உரிமையாளர்கள் கடைகளின் இருபுற நுழைவாயில்களையும் பயன்படுத்தி, பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருவதாகவும் இதுகுறித்து புகார்கள் வந்தபோது மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகவும், நிரந்தர தீர்வு எதுவும் காணப்படவில்லை என்றும் பொதுமக்கள் ஒரு புறம் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நீண்டகாலமாக வாடகை பாக்கி வைத்திருந்த மூன்று கடைகளின் வாடகை ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான கோப்புகளை உதவி ஆணையர் தயாரித்து, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவிடம் அனுப்பிய நிலையில், சம்பந்தப்பட்ட சில கடை உரிமையாளர்கள் செல்வாக்கு மிக்க நபர்களை சந்தித்து, தங்களது கடை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்களாம். 

இதனால், விதிமுறைகளின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா? வாடகை பாக்கி வைத்துள்ள அனைத்து கடைகளிடமும் பாரபட்சமின்றி நிலுவைத் தொகையை வசூலித்து, விதிமுறைகளை தொடர்ந்து மீறுவோரின் வாடகை ஒப்பந்தங்களை ரத்து செய்வாரா?

மேலும், மாநகராட்சியில் பணியாற்றும் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் உறவினர்கள் அல்லது பினாமி பெயர்களில் அண்ணா பேருந்து நிலையத்தில் கடைகள் இருக்கும் நிலையில் அதனையும் முறைப்படுத்துவாரா?

மேலும், ஆக்கிரமிப்பு அகற்றம், வாடகை பாக்கி வசூல் மற்றும் விதிமுறை மீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.