கொட்டும் மழையிலும் அண்ணாமலை பேச்சு; நாற்காலியை தலையில் பிடித்தபடி கேட்ட பொதுமக்கள்.!

கொட்டும் மழையிலும் அண்ணாமலை பேச்சு; நாற்காலியை தலையில் பிடித்தபடி கேட்ட பொதுமக்கள்.!

தூத்துக்குடி: வி தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை கடற்கரைகளை சுத்தம் செய்யும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று (02.08.2026) கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைப்பின் தலைவர் அண்ணாமலை, பின்னர் தூத்துக்குடி மாநகரில் உள்ள திரேஸ்புரம் பகுதிக்கு வந்தார். அங்கு பொதுமக்கள் மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அண்ணாமலை மேடையில் பேசத் தயாரான நேரத்தில் திடீரென பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இருப்பினும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படவில்லை. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அண்ணாமலை மேடையிலேயே நின்று உரையாற்றினார். மழைக்கு ஒதுங்கிச் செல்லாமல், பொதுமக்களும் நாற்காலிகளைத் தலையில் குடைபோல் பிடித்தபடி அவரது பேச்சை ஆர்வமுடன் கேட்டனர். சிலர் மழையில் நனைந்த படியே அவரது பேச்சை கேட்டனர்.. இந்த காட்சி அங்கு திரண்டிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ஆகஸ்ட் 1 முதல் கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை சுமார் 175 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையை 365 நாட்கள் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணியை தொடங்கியுள்ளோம். ஓராண்டுக்குப் பிறகு இந்தியாவிலேயே முன்மாதிரி கடற்கரையாக இதை மாற்றிக் காட்டுவோம். இது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல, மக்களின் பங்களிப்புடன் நடைபெறும் மக்கள் இயக்கம் என்றார்.

மேலும், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இன்று செய்த பணிக்குக் கூலியாக வருண பகவான் மழையாக நமக்கு ஆசீர்வாதம் வழங்கியுள்ளார் என்ற அவர், தூத்துக்குடியில் நடைபெறவுள்ள மாநாட்டில் அரசியல் குறித்து விரிவாகப் பேசுவோம். இன்று அரசியல் பற்றி பேச விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.