தூத்துக்குடி மாநகராட்சியில் அதிரடி நடவடிக்கை: ஒருவர் இடைநீக்கம்; 10 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம்.!

தூத்துக்குடி மாநகராட்சியில் அதிரடி நடவடிக்கை: ஒருவர் இடைநீக்கம்; 10 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம்.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் ஒழுங்கு நடவடிக்கையாக ஒரு பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், சுமார் 10 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் நான்கு மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சியுடன் முன்னாள் ஊராட்சி (பஞ்சாயத்து) பகுதிகள் இணைக்கப்பட்டபோது, அப்பகுதிகளில் பணியாற்றி வந்த சிலர் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், வடக்கு மண்டலத்தில் வால்வு ஆபரேட்டராக பணியாற்றி வந்த மோகன் என்பவர், மாநகராட்சி அனுமதி இன்றி குடிநீர் இணைப்புகள் வழங்கியதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், குற்றச்சாட்டு தொடர்பாக முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாகக் கருதப்பட்டதால், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மோகனை இடைக்கால பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், மாநகராட்சியில் தற்காலிக டெக்னிக்கல் அசிஸ்டென்ட்களாக பணியாற்றி வந்த 10-க்கும் மேற்பட்டோர், பின்னர் டேப் இன்ஸ்பெக்டர்களாக பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வந்தனர். இதற்கிடையில், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களை மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்களாக நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சியில் தற்காலிக பணியாளர்களாக இருந்து டேப் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த சுமார் 10 பேரை, மாநகராட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

ஒரே நேரத்தில் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், சுமார் 10 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது மாநகராட்சி அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.