"போலீஸ் வாகனத்துக்குள் அப்பா... வெளியே மகன்... கைஅசைப்பில் பேசிய பாசம்!
தூத்துக்குடி: தமிழக முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்–1 தள்ளுபடி செய்தது.
அதேபோல், குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் தாக்கல் செய்த போலீஸ் காவல் விசாரணை மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த வழக்கு விசாரணைக்காக மார்க்கண்டேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதித்துறை நடுவர் சுமதி, ஜாமீன் வழங்க மறுத்ததுடன், போலீஸ் காவல் கோரிக்கையையும் நிராகரித்து உத்தரவிட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த மார்க்கண்டேயன், கட்சியினரிடம், எத்தனை நாள் உள்ளே இருக்குமோ அவ்வளவு வேகத்தில் ஆட்சிக்கு வருகிறோம்.. அனைவரும் சந்தோஷமாக இருங்கள்.. நீதிமன்றத்தில் ரொம்ப சவுரியமாக இருக்கிறது. 25 புத்தகம் சிறைச்சாலையில் வைத்திருக்கின்றேன் என்றார்.
இதற்கிடையில், தந்தை மார்க்கண்டேயனை பார்க்க, அவரது மகன் அக்க்ஷய் மார்க்கண்டேயன் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தார். போலீஸ் வாகனம் புறப்படுவதற்கு முன் தந்தையை பார்த்த அக்க்ஷய் கை அசைத்து விடைபெற்றார். அதைக் கண்ட மார்க்கண்டேயனும் போலீஸ் வாகனத்திற்குள் இருந்தபடியே மகனை நோக்கி கை அசைத்து பதிலளித்தார்.
சில நொடிகள் மட்டுமே நீடித்த அந்த தந்தை–மகன் சந்திப்பு, நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வார்த்தைகள் பரிமாறிக்கொள்ள முடியாத சூழலில், இருவரும் கை அசைத்தபடியே உணர்வுகளை வெளிப்படுத்திய அந்த காட்சி அங்கிருந்த பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது..
துப்பறிவாளன் மணி