இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 8 வெள்ளாடுகள், புறாக்கள் பறிமுதல்.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படும் பொருட்களை தடுக்க க்யூ பிரிவு போலீசாரும், கடலோர போலீசாரும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் உள்ள அண்ணா காலனி கடற்கரை வழியாக பைபர் படகில் இலங்கைக்கு உயிரினங்கள் கடத்தப்பட உள்ளதாக க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் க்யூ பிரிவு போலீசார் மற்றும் கடலோர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகை சோதனை செய்தபோது, அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலையில் 8 வெள்ளாடுகள் மற்றும் 4 பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த புறாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வருவதை அறிந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து, சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 8 வெள்ளாடுகள், புறாக்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு ஆகியவற்றை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வழக்கமாக தூத்துக்குடி கடல் வழியாக பீடி இலைகள், மஞ்சள் மாத்திரைகள், பட்டாசுகள், அழகு சாதனப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதும் அவ்வப்போது பறிமுதல் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.
ஆனால், தற்போது வெள்ளாடுகள் மற்றும் புறாக்கள் போன்ற உயிரினங்களையும் கடத்த முயற்சி நடைபெற்றிருப்பது கடத்தல் கும்பலின் செயல்பாடு போலீசாரின் கண்ணில் மண்ணை தூவுவதாகவே தெரிகிறது.
அதேநேரத்தில், கடத்தல் பொருட்கள் மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்தாலும், கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் பெரும்பாலான வழக்குகளில் கைது செய்யப்படாமல், தப்பியோடிவிட்டனர் என்ற தகவலே வெளியாகிறது.
இதனால், கடத்தல் கும்பலை முழுமையாக ஒடுக்குவதில் நடவடிக்கைகள் போதுமானதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடத்தல் பொருட்களை மட்டும் பறிமுதல் செய்வதைத் தாண்டி, அதன் பின்னணியில் செயல்படும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்து கடல் வழி கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
துப்பறிவாளன் மணி