பாரபட்சம் காட்டுகிறதா மாநகராட்சி? – அனுமதியின்றி இயங்கும் கட்டிடங்கள் நடவடிக்கை எப்போது?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் பல திருமண மண்டபங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இந்த தனியார் நிறுவனங்கள் மாநகராட்சியின் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வருவதாகவும், பல கட்டிடங்களில் விதிமுறைகளை மீறி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஒர் மிக பெரிய குற்றசாட்டு தற்போது எழுந்துள்ளது.
பல்வேறு திருமண மண்டபங்களில் போதிய வாகன நிறுத்துமிட வசதி இல்லாததுடன், சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில்வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளில் லட்சக்கணக்கில் நிலுவை வைத்திருக்கிறார்களாம்.
இதேபோல், சில மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களும் மாநகராட்சிக்கு கணிசமான தொகையை நிலுவையாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, மாநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளி மட்டும் சுமார் ரூ.23 லட்சம் வரை மாநகராட்சிக்கு நிலுவை வைத்திருக்கும் நிலையில் இத்தகைய பெரிய நிலுவைதாரர்களிடம் இருந்து வரிகளை வசூலிக்கவும், தேவையான இடங்களில் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கவும் மாநகராட்சி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.
அதே நேரத்தில், ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை மட்டுமே நிலுவை வைத்துள்ள கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களின் வீடுகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று உடனடியாக குடிநீர் இணைப்பை துண்டிக்கின்றனர். ஆனால் அதிக தொகை நிலுவை வைத்துள்ள கட்டிடங்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநகரில் 1,000-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் மாநகராட்சியின் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் நிலையில் அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு எந்த அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்பட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது என்பதையும் மாநகராட்சி நிர்வாகம் விளக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
சட்டத்தில் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, அனுமதியின்றி செயல்படும் கட்டிடங்களுக்கு சீல் வைப்பது, வரி நிலுவைதாரர்களிடம் நிலுவைத் தொகையை வசூலிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அரசியல் அல்லது பணபலத்தின் அடிப்படையில் யாருக்கும் சலுகை வழங்கக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துப்பறிவாளன் மணி