"டெல்லியிலிருந்து தமிழக அரசியலுக்கு? கனிமொழி கருணாநிதி குறித்து பெரும் எதிர்பார்ப்பு”
தூத்துக்குடி: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
கனிமொழி கருணாநிதி தற்போது டெல்லி அரசியலில் திமுகவின் முகமாக திகழ்கிறார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் நேரடியாகப் பங்காற்ற ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் அல்லது சென்னையைச் சுற்றியுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட அவர் விரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் செய்துள்ள ஆக்கப்பூர்வமான பணிகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் ஆகவே, அவரை சட்டமன்ற உறுப்பினராகப் பார்க்க விரும்பி, பல்வேறு மகளிர் அமைப்புகள் மற்றும் சமூக நல அமைப்புகள் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கனிமொழி அவர்களை வேட்பாளராக அறிவிப்பதில் சில சவால்களும் திமுக தலைமைக்கு உள்ளன.. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருக்கும் நிலையில், கனிமொழியையும் சட்டமன்றத்திற்கு அழைத்து வருவது எதிர்க்கட்சிகளின் 'வாரிசு அரசியல்' விமர்சனத்திற்கு வழிவகுக்கலாம்.
திமுகவின் தேசிய அளவிலான குரலாக கனிமொழி இருப்பதால், அவரை மாநில அரசியலுக்கு மாற்றினால் டெல்லியில் அந்த இடத்தைப் பூர்த்தி செய்யக் கூடிய வலுவான ஆளுமை தேவைப்படும். சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடும் பட்சத்தில், அவரது சொந்தத் தொகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதி அல்லது நெல்லை மற்றும் அவர் வளர்ந்த இடமான சென்னையில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
இது ஒரு புறம் இருக்க, பல்வேறு சமூக நல அமைப்புகள் கனிமொழி கருணாநிதியை சட்டமன்றத் தேர்தலில் களம் இறக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு கத்தோலிக்க சங்க தலைவர் வின்சென்ட் வேதராஜ் சங்கத்தின் சார்பாக முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பியை, தமிழ்நாடு நலம்பேணி பணிபுரியும் வண்ணம் தமிழ்நாட்டில் முழுநேர அரசியலுக்கு வரவழைத்து அதன்மூலம் தமிழ்நாடு பெண்களின் பாதுகாப்பு மற்றும் வழிகாட்டியாக வலம் வரச்செய்வது திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கு பயனுள்ளதாக விளங்கும். ஆகவே, தமிழக அரசியலில் ஈடுபட வைப்பது மற்றும் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் கனிமொழி கருணாநிதி எம்.பியை வேட்பாளராக அறிவிக்கவும், தமிழ்நாடு கத்தோலிக்க சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நாட்டுப்புறக் கலைஞர் தேன்மொழி ராஜேந்திரன் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறிஇருப்பதாவது: திராவிட இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரும், கலைஞர்களின் அன்பும் ஆதரவும் பெற்றவருமான முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மகளான திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழ் மக்களுக்கும், தமிழ் கலைஞர்களுக்கும், பெண்கள் சமூகத்திற்கும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில், நாடார் சமுதாய மக்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருக்களிலும், ஒவ்வொரு கிராமங்களிலும், ஒவ்வொரு நகரங்களிலும், ஒவ்வொரு மாநகராட்சிகளிலும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் பரவலாக வசித்து வருகின்றனர். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக ஒரு முக்கியமான பங்கு வகிக்கும் சமுதாயமாக நாடார் சமுதாயம் திகழ்கிறது.
தமிழக முன்னாள் முதலமைச்சரின் மகளான கனிமொழி கருணாநிதிக்கு மாநில அரசியலில் பங்கு பெறும் வகையில், இந்தமுறை நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று என நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தென் மாவட்டங்களுக்கும், மகளிர் உரிமைகளுக்கும் மற்றும் பெண் பிள்ளைகளின் நலனுக்கும் ஒரு சிறந்த பாதுகாப்பான அரசியல் தலைவராக விளங்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
கனிமொழிக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், அது திமுகவின் வாக்கு வங்கியை, குறிப்பாகப் பெண் வாக்காளர்கள் மத்தியில் மேலும் பலப்படுத்தும் என்பது சமூக நல அமைப்புகளின் கருத்தாக உள்ளது. ஆனால், 2026 தேர்தலில் கனிமொழி போட்டியிடுவது “50-50” நிலை தான்.
ஆகவே, பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தியாளர் மு.மணிகண்டன்