அதிமுகவை பொறுத்த வரையில் சமரசமே கிடையாது.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு..!

Jan 23, 2025 - 15:48
Jan 23, 2025 - 15:49
 0
அதிமுகவை பொறுத்த வரையில் சமரசமே கிடையாது.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு..!

அதிமுகவை பொருத்தவரை சமரசம் என்பதே கிடையாது. நயினார் நாகேந்திரன் கூறியது அவரது கருத்தா அல்லது பாஜக கருத்தா என்பது தெரியவில்லை - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி..!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 128 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாக பேசினால் கூட்டணி அமைந்துவிடும், ரைடு நடத்தி கூட்டணி அமைக்கவேண்டிய அவசியமில்லை என்று நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? நயினார் நாகேந்திரன் அவரது கட்சி நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். 2026 தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டும் இருப்பதால் அனைத்து கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக என அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணித்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. திமுக அரசுக்கு இதைவிட அசிங்கம் வேறு ஏதும் இருக்காது. திமுக அரசினை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் ‌மக்களிடத்தில் இருப்பது போல அனைத்து அரசியல் கட்சிகள் இடத்திலும் உள்ளது. யாரெல்லாம் கூட்டணி சேர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் தங்களது கருத்தை சொல்லுவார்கள்.

அதிமுகவை பொருத்தவரை சமரசம் என்பதே கிடையாது. திமுகவுக்கு மாற்று அதிமுக தான். கூட்டணி ஆட்சி என்பது எங்களது வரலாற்றில் கிடையாது. நயினார் நாகேந்திரன் கூறியது அவரது கருத்தா அல்லது பாஜக கருத்தா என்பது தெரியவில்லை. 

நாள்கள் செல்ல, செல்ல பாஜக மட்டுமல்ல திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு வர குரல் ஒலிக்கும். கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ளது. அதிமுக வெற்றி கூட்டணி அமைக்கும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow