தந்தை மகனை கொடூரமாக தாக்கிய அமமுக நிர்வாகி.!

தந்தை மகனை கொடூரமாக தாக்கிய அமமுக நிர்வாகி.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுடலை இவரது மகன் அஜய், அப்பகுதியில் உள்ள பிராய்லர் சிக்கன் மொத்த விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். அஜய் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த கடை அமைந்துள்ள இடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில நிர்வாகி பூலோக பாண்டியனுக்கு சொந்தமானது. அந்த இடத்தை நெல்லையைச் சேர்ந்த மகாலிங்கம் வாடகைக்கு எடுத்து கோழி மொத்த விற்பனை நிலையமாக நடத்தி வந்தார். இடத்தை காலி செய்யும் விவகாரத்தில் பூலோக பாண்டியன் மற்றும் கடை உரிமையாளர் இடையே முன்பே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை சுடலை மற்றும் அவரது மகன் அஜய் கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, பூலோக பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்து தகராறு செய்துள்ளனர். “நீங்கள் வேலை செய்வதால் தான் கடை காலி செய்யப்படவில்லை” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், தந்தை–மகன் இருவரையும் கட்டைகள் மற்றும் கோடாளி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் அஜய் தலையில் கடுமையாக காயமடைந்து ரத்தக் குளத்தில் சரிந்தார். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் காயமடைந்த சுடலை மற்றும் அஜய்யை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இடத் தகராறில் ஈடுபட்டு தந்தை–மகனை தாக்கியது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.