தூத்துக்குடி, தவெக மத்திய மாவட்ட செயலாளரால் அதிர்ச்சியில் நிர்வாகி.!

தூத்துக்குடி, தவெக மத்திய மாவட்ட செயலாளரால் அதிர்ச்சியில் நிர்வாகி.!

தூத்துக்குடி, மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ் செய்த செயலால் மனம் வெதும்பி போன தவெக நிர்வாகி.!

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஸ்ரீவைகுண்டத்தைத் தவிர  5 சட்டமன்ற தொகுதிகளுக்கான மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இவர் நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடி வருகை தந்த போது புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே தவெக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு மலர் கிரீடம், மாலை, சால்வை அணிவித்து தடால், புடால் என வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து, ஊர்வலமாக வந்து மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நியூ காலனி பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு சென்றார்.

ஆனால், இவர் நேரடியாக தூத்துக்குடி மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதாக இருந்ததாம். ஆம், தவெக நிர்வாகி ஒருவரின் சொந்த செலவில் 20 ஆயிரம் வரை செலவு செய்து அமர்க்களப்படுத்த காத்திருந்துள்ளார் அந்த தவெக நிர்வாகி. ஆனால் இலவு காத்த கிளி போல் அவர் காத்திருந்தது தான் மிச்சம்.

12 மணிக்கு வருவதாக இருந்த சாமுவேல் வரவில்லை. 12:30 மணிக்கு வருவதாக இருந்த அவர் வரவில்லை. 'பூனை வருது, புலி வருது' என்று டிமிக்கி கொடுத்து கொண்டே இருந்துள்ளார் சாமுவேல் ராஜ். இறுதியாக 1 மணி ஆகியும் சாமுவேல் வராத நிலையில், ஏற்பாடுகளை செய்திருந்த அந்த தவெக நிர்வாகி செல்போனில் தொடர்பு கொண்டு எப்போது வருகிறீர்கள் என்று கேட்டப் போது, கோவிலுக்கு நாங்கள் வரவில்லை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்களாம். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த தவெக நிர்வாகி மனம் வெதும்பி புலம்பி தீர்த்துள்ளார். 

ஏற்கனவே, தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தில் கடும் போட்டா, போட்டியானது நிலவி வருகிறது. பதவி கிடைக்காத விரக்தியில் விரும்பத் தகாத செயல்களை செய்ததால் தலைமை அப்செட் ஆக்கியுள்ளதாம்..  இந்த நேரத்தில் தலைமையின் மனதில் முழுமையாக இடம் பிடிப்பதே மாவட்ட செயலாளருக்கு அழகு.

ஆனால், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கின்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் சாமுவேல் செய்த காரியம் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் அமைந்துள்ளது.

கட்சி நிர்வாகிகளை மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல் மதிக்க தெரியாமல் இருக்கின்றாரா? இல்லை அவருடன் இருக்கும் சிலர் அவருக்கு தெரியாமலேயே ஒரு சில விஷயங்களை மூடி மறைகின்றார்களா? 

மாவட்ட செயலாளர்கள் செயல்பாடு சரியில்லை என்றால் பதவி தூக்கி எறியப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த ஏற்கனவே கூறியிருந்தார்.. ஆகவே, சாமுவேல்ராஜ் அனைவரையும் அரவணைத்து மத்திய மாவட்ட செயலாளர் பதவியை தக்க வைத்து சாதிப்பாரா, இல்லை சறுக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தியாளர்: மு. மணிகண்டன்.