ஒழுங்கா போறீங்களா., அனைவரையும் கைது செய்து உள்ளே வைத்து விடுவேன் - மிரட்டிய ஆய்வாளர்.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் நேற்று மாலை 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கொலை செய்யப்பட்டு 24 மணி நேரம் கடந்தும் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் வேடநத்தம் கிராம பொதுமக்கள் குளத்தூர் – குறுக்குசாலை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என கூறி சிலரை கைது செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான நிலை உருவானது.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளர் ஹரிஹரன், “ஒழுங்காக போய்விடுங்கள்; இல்லையெனில் உங்கள் அனைவரையும் கைது செய்து உள்ளே வைக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தொடர்ந்து மதுரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் மு.மணிகண்டன்