“குற்றவாளியை உடனே கைது செய்யுங்கள்”… கனிமொழியிடம் ஆவேசம் காட்டிய வேடநத்தம் மக்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் பகுதியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கடந்த மூன்று நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று தூத்துக்குடி –மதுரை தேசிய நெடுஞ்சாலை குறுக்கு சாலை பகுதியில் கிராம மக்கள் 10 மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கனிமொழி கருணாநிதி எம்பி மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் கீதா ஜீவன் மற்றும் மார்க்கண்டயன் ஆகியோரும் வந்திருந்தனர்.
மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், "குற்றவாளிகளை உடனே கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இல்லையெனில் குற்றவாளியை எங்களிடம் ஒப்படையுங்கள். உயிரிழந்த மாணவியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்த கனிமொழி எம்பி, “குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அரசு முழுமையாக துணை நிற்கும்” என்று உறுதி அளித்தார். ஆனால், வீட்டிலிருந்து வெளியே வந்த கனிமொழி எம்பியை கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“மூன்று நாட்களாகியும் குற்றவாளியை ஏன் கைது செய்யவில்லை? ஏன் தாமதமாக வந்தீர்கள்?” என கேள்விகளை எழுப்பி பதில் கூற விடாமல் சூழ்ந்தனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் மற்றும் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆகியோரை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் வேடநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
செய்தியாளர் மு.மணிகண்டன்