“ஐந்து வருடம் எங்கே சென்றீர்கள்? என்று கேட்காத மக்கள்.!

“ஐந்து வருடம் எங்கே சென்றீர்கள்? என்று கேட்காத மக்கள்.!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 79-ஆவது ஆண்டு நிறுவன விழாவை முன்னிட்டு சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, மதிமுக, உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இஃப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், “நாம் ஒற்றுமையுடன் இருந்தால் யாராலும் நம்மை வீழ்த்த முடியாது. முஸ்லிம் சமுதாயத்தினர் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கும் நோன்பு ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் மனிதநேயத்தை எடுத்துரைக்கிறது. மதம் எதுவாக இருந்தாலும் அன்பும் கருணையும் தான் போதிக்கிறது. ரமலான் காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வரும் முஸ்லிம் சமூகத்தின் மனிதநேய பணியை பாராட்டுகிறேன். 

"சிலர் நம்மிடையே குழப்பம் ஏற்படுத்தி பிரிவினையை உருவாக்க முயற்சி செய்வார்கள். அதற்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாசிச பாஜக ஆட்சி எந்த அளவிற்கும் இறங்கி நம்முடைய கூட்டணியை முறியடிக்க முயற்சி செய்கிறது. ஆனால் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும் என்பதை நிரூபிப்போம்.

“‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து சமுதாயங்களுக்கும் சமமாக நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. கோவில்களின் திருப்பணிகளுக்கும் அரசின் மூலம் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 4,000 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் வந்துள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது. தூத்துக்குடியில் சாலை வசதிகள், மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள், பூங்காக்கள், மகளிர் பூங்கா, 13 நகர் நல மையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மின்சார வசதிகளை மேம்படுத்த 210 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், தூத்துக்குடி நகரத்தில் காப்பீடு பெற்ற மக்களின் எண்ணிக்கை முன்பு 50 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது 95 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், மீதமுள்ள மக்களும் காப்பீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் பல இடங்களுக்கு சென்று வருகிறேன். ஐந்து வருடம் எங்கே சென்றீர்கள் என்று யாரும் கேட்கவில்லை. யாரும் வெற்றி பெற்று சொகுசாக இருக்கவில்லை; மக்களோடு மக்களாக சுற்றி பணி செய்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் மக்கள் எங்களை நம்புகிறார்கள்..

“மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.0 ஆட்சி தமிழகத்தில் அமைய அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இறைவனை வணங்கி வாழ்வோம், இல்லாதவர்களுக்கு வழங்கி வாழ்வோம், அனைவரையும் இணைத்து வாழ்வோம்” என்று கூறி அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார்.