போராட்டம் ஒருபுறம், மனிதாபிமானம் மறுபுறம்.!

போராட்டம் ஒருபுறம், மனிதாபிமானம் மறுபுறம்.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது 12ம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.. 

குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் நோக்கில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையானது நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கு சாலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வருவதால் கடும் போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதிமுக, தமிழக வெற்றி கழகம், பாஜக, மாணவர் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது, போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், அந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மனிதாபிமான அடிப்படையில் ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்டு அனுப்பினர்..

குறிப்பாக, தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று வருகிறது...

மேலும், பேருந்துகள் எப்போதும் வென்றான், பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் விளாத்திகுளம் சாலை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.