பத்திரிகையாளர்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு.!

பத்திரிகையாளர்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு.!

தூத்துக்குடி: தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

அப்போது, செய்தி சேகரிப்பதற்காக புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய முயன்ற பத்திரிகையாளர்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு தடுத்து நிறுத்தியதுடன், அவர்களிடம் தரக்குறைவாக பேசியும், நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டார். 

அதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் ஜனநாயகக் கடமை. அந்தப் பணியைச் செய்ய விடாமல் காவல்துறை அதிகாரி செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.

எனவே, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபு மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், அவரை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்ய வேண்டும் என பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் நேரில் கேட்டறிந்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா கூறும் போது, "இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன். காவல்துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே நெருக்கமான மற்றும் பரஸ்பர மரியாதையுடனான உறவு இருக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, சண்முகசுந்தரம், ராஜா சிதம்பரம், காட்சன், மோகன்ராஜ், அண்ணாதுரை, செந்தில்முருகன், முத்துராமன், ராஜன், விஜயகாந்த், ராமச்சந்திரன், சங்கரநாராயணன், ஜெயக்குமார், மாரிமுத்து, செய்யது அலி சித்திக், ராஜ், விஜய் மற்றும் துப்பறிவாளன் மணி உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.