தென் மாவட்டங்களை குறிவைத்து பழனிசாமி அரசியல் நகர்வு?

தென் மாவட்டங்களை குறிவைத்து பழனிசாமி அரசியல் நகர்வு?

தூத்துக்குடி: தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் இறந்த பின், அவரது மகள் சந்தனப்பிரியா, அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலராக உள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவு அளித்து தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். அவரது அமைப்புக்கு தென் மாவட்டங்களில் ஆதரவு இருப்பதால், அவரை அழைத்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியுள்ளார்.

அதிமுக கூட்டணியில், அவர் சேர முன்வந்துள்ளதாகவும், ஒரு தொகுதி ஒதுக்க முடிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுகள் அதிகமாக இருக்கும் நிலக்கோட்டை அல்லது ஓட்டப்பிடாரம் தொகுதி ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலினை போல, நிறைய கட்சிகளை கூட்டணியில் இணைத்து, அதிமுக- பாஜ கூட்டணியை வலுப்படுத்த சின்ன சின்ன கட்சிகளையும் விடாமல் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் அதிமுக களம் இறங்கி உள்ளது. அதற்காக, தமிழகத்தில் ஓரளவுக்கு செல்வாக்கோடு இருக்கும் அனைத்து கட்சிகளிடமும் கூட்டணி குறித்து பேசுமாறு கட்சியினருக்கு, பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தான், தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை அதிமுக கூட்டணியில் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னெடுப்பின் மூலம், தென் மாவட்டங்களில் அதிமுக தனது வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்திக் கொள்ள முடியும் என அரசியல் தரவுகள் தெரிவிக்கின்றன..