அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி..!

Jan 23, 2025 - 18:30
Jan 23, 2025 - 18:31
 0
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி..!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையின் சென்னை அலுவலக மண்டலம் முடக்கியுள்ளது.

தமிழக அரசில் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக, அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட இந்த சொத்துக்கள், துாத்துக்குடி, மதுரை, சென்னையில் உள்ளன.

அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த காலத்தில், அனிதா ராதாகிருஷ்ணன், லஞ்ச ஊழல் செய்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து விட்டதாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு நடத்தி வருகிறது. இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அனிதா ராதாகிருஷ்ணன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதை நிராகரித்த ஐகோர்ட், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி அமைச்சருக்கு உத்தரவிட்டது.

தொடர்ந்து, அமைச்சரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இத்தகைய சூழ்நிலையில், அமைச்சருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow