தூத்துக்குடி அரசியல் கடலில் “பரதர் அலை” எழுச்சி! மார்ச் 1-ல் மாநாடு – முக்கிய அறிவிப்புகள் வருமா?

தூத்துக்குடி அரசியல் கடலில் “பரதர் அலை” எழுச்சி! மார்ச் 1-ல் மாநாடு – முக்கிய அறிவிப்புகள் வருமா?

தூத்துக்குடி: தமிழகத்தின் கடலோர அரசியல் இப்போது மீண்டும் மீனவர் அலையால் குலுங்கிக் கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை பரவி வாழும் பரத குல மீனவர்கள், “இந்த முறை எங்களுக்கு சீட் வேணும்!” என்று அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக வலை வீசத் தொடங்கியுள்ளனர்...

கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பரதர் சமூக மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றார்கள். “நாங்கள் வாக்கு போட மட்டும் இல்லை, வேட்பாளராகவும் வரணும்!” என்ற கோரிக்கை காலங்காலமாக இருந்தாலும், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேறவே இல்லை என்பதே குற்றச்சாட்டு.

ஆகவே, வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, தவெக போன்ற பிரதான கட்சிகளுக்கு பரதர் அமைப்புகள் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், தூத்துக்குடி, ராதாபுரம், குளச்சல் உள்ளிட்ட தொகுதிகளில் பரதர் சமூக மக்கள் அதிகம் இருப்பதால், அங்கு ஒருவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதே.

வளர்ந்து வரும் பெருநகரமான தூத்துக்குடியை கிழக்கு-மேற்கு என்று பிரித்து, கிழக்கு பகுதியை மீனவர் சமூகத்துக்கு ஒதுக்கணும்!” என்ற புதிய அரசியல் கணக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

“எந்தக் கட்சி எங்களுக்கு சீட் தருதோ, அந்தக் கட்சிக்கே தமிழக மீனவர்களின் ஆதரவு!” என்ற ஒரே வரி அரசியல் ஸ்லோகன் தற்போது கடலோரத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சூழ்நிலையில், மார்ச் 1-ஆம் தேதி பனிமயமாதா ஆலயம் அருகே பரதர் குல அரசியல் மாநாடு நடைபெற உள்ளது.பல்வேறு மீனவ சங்கங்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்.. மாநாட்டில் முக்கிய அரசியல் தீர்மானங்கள் அறிவிக்கப்படலாம் என்றும், கட்சிகளுக்கு “டெட்லைன்” வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் பரதர் நலச் சங்கத்தின் சார்பில் ஒரு பெண் வேட்பாளரை முன் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த பெண், ஒரு “உச்ச நடிகர்” தொடங்கிய கட்சியில் தற்போது செயல்பட்டு வருகிறார். அதே கட்சியில் போட்டியிட விருப்ப மனுவும் கொடுத்துள்ளார். ஆனால், வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்க வாய்ப்பு குறைவு” என்று ஒரு தரப்பினர் கூறி வந்தாலும் அது முற்றிலும் ஆதாரமற்றது என்று மற்றொரு தரப்பு கடுமையாக மறுத்து வருகிறது. “அவர் மட்டுமே தூத்துக்குடியில் தொடர்ச்சியாக மக்கள் பணி செய்து வருகிறார். கட்சியின் அடிப்படை அமைப்பை நிலை நிறுத்தியதும் இவர்தான். ஆகவே, சீட் உறுதி!” என ஆதரவாளர்கள் உறுதியுடன் கூறுகின்றனர்.

சீட் இல்லை என்ற வதந்திகளும், சீட் உறுதி என்ற உறுதியான குரல்களும் இரண்டு தரப்புகளின் அரசியல் மோதலுக்கு இந்த மாநாடே பதில் சொல்லுமா? என்ற கேள்வி எழுகிறது.

இதனால், சுயேட்சையா? கூட்டணியா? அல்லது கடைசி நிமிட ட்விஸ்டா?” என்ற கேள்வி தூத்துக்குடி அரசியலில் தீயாக பரவி வருகிறது. வாக்கு வங்கிக்காக மட்டும் நம்மை தேடுறீங்களா? இல்ல வேட்பாளராக்கப் போறீங்களா? என்ற பரதர் சமூகத்தின் கேள்வி இப்போது கட்சிகளின் கதவைத் தட்டுகிறது.

இந்த முறை கட்சிகள் வலை வீசுமா? அல்லது மீனவர்களே தனி வலை வீசி அரசியல் கடலை கலக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்