தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் கசிவு – தீ விபத்து தவிர்ப்பு.!
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமான தீ விபத்து, துரிதமான நடவடிக்கையால் பெரிய பாதிப்பின்றி தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஐந்து தளங்களில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளுடன் இயங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையின் நான்காவது தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கம் அருகே அமைந்திருந்த மின் சுவிட்ச் போர்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதனால் புகை வெளியேறி, அப்பகுதியில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களிடையே பரபரப்பு நிலவியது.
உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் மின்சார விநியோகத்தை முழுமையாக நிறுத்தினர். இதனால் பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. சில நேரம் அந்த பகுதியில் புகை மூட்டம் காணப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனை மின் பணியாளர்கள் மற்றும் நர்ஸ்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி கருணாகரன் தெரிவித்ததாவது: "அவசர காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கி வருகிறோம். அதன்படி அவர்கள் செயல்பட்டதன் மூலம் இந்த விபத்து கட்டுப்படுத்தப்பட்டது என்றார்.
இதற்கிடையில், மருத்துவமனையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக வதந்திகள் பரவியதால் பொதுமக்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் மு.மணிகண்டன்