“வேடநத்தம் மாணவி மரணம்: நீதி கேட்டு மக்கள் போராட்டம் – போலீசுக்கு சவால் ஆன வழக்கு"

“வேடநத்தம் மாணவி மரணம்: நீதி கேட்டு மக்கள் போராட்டம் – போலீசுக்கு சவால் ஆன வழக்கு"

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம்,  குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 600 குடும்பங்களுக்கும் குறைவாக வசிக்கும் சிறிய கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தில் கூட குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருவது பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுப்புராஜ் மற்றும் அவரது மனைவி காளீஸ்வரி தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இரண்டாவது மகள் அருகிலுள்ள குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

கடந்த 11 ஆம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் வீட்டின் அருகே உள்ள புதர்பகுதிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் மதியம் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் மாணவி உடலில் பலத்த காயங்களுடன், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மாணவி மாயமான நாளிலேயே குளத்தூர் மற்றும் விளாத்திகுளம் மகளிர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தபோதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் போலீசார் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து தொடர் போராட்டமும் நடத்தினர். இன்றுடன் 6 வது நாட்களாக மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை முக்கிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

துப்பறிவுத் திறனிலும், பல சிக்கலான வழக்குகளை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்த அனுபவத்திலும் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையாகக் கருதப்படும் தமிழக காவல்துறை, இந்த வழக்கில் ஏன் தடுமாறுகிறது? 

சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதி அடர்ந்த வனப்பகுதி அல்ல. முள்செடிகள் நிறைந்த புதர்பகுதியாக இருப்பதால் அங்கு பலவந்தமாக தாக்குதல் நடந்திருந்தால் மாணவிக்கும் குற்றவாளிகளுக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மாணவியின் உடல் கிடந்த இடத்தில் பெரிய அளவிலான போராட்ட தடயங்கள் எதுவும் இல்லை.

இதனால் மாணவியை வேறு இடத்தில் கொலை செய்து பின்னர் உடலை அந்த இடத்தில் கொண்டு வந்து வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உண்மையான கொலை நடந்த இடம் எது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

மேலும், இந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்டதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் அந்த ஊருக்கு பலமுறை வந்து சென்றிருக்க வேண்டும். ஒரு சிறிய கிராமத்தில் வெளிநபர்கள் அடிக்கடி வருவது உள்ளூர் மக்களின் கவனத்திற்கு வரும் என்பதால் அதுகுறித்த தகவல்கள் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என போலீசார் கருதுகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததும் விசாரணைக்கு சிக்கலாகியுள்ளது. தற்போதைய சூழலில் பல குற்றவாளிகளை கண்டுபிடிக்க முக்கிய ஆதாரமாக இருப்பது செல்போன் அழைப்புகள் மற்றும் சிசிடிவி காட்சிகளாகும். இதனால் அந்த பகுதியில் நடந்த செல்போன் அழைப்புகள், சந்தேகமான தொடர்புகள் போன்றவற்றையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

கொலை செய்து விட்டு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதைவிட, பொதுமக்களோடு கலந்துவிட்டு மறைந்து நிற்கும் குற்றவாளிகளை அடையாளம் காண்பது தான் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவியை கொலை செய்த குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.