சிலிண்டர் தட்டுப்பாடு… தூத்துக்குடி ஹோட்டல்களில் “விறகு அடுப்பு” ரீஎன்ட்ரி!
தூத்துக்குடி: உலகளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தற்போது தூத்துக்குடி நகரிலுள்ள சிறிய உணவகங்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா நாடுகள் இடையே நிலவி வரும் போர் சூழ்நிலையால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக கேஸ் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமை இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேஸ் உற்பத்தி செய்யும் சில நிறுவனங்கள் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை உற்பத்தி செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
முன்பு சுமார் ரூ.2300க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் தற்போது ரூ.3000 வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தூத்துக்குடி மாநகரில் உள்ள பல சிறிய உணவகங்கள் தற்போது கேஸ் அடுப்பை விட்டு விறகு அடுப்பு மற்றும் கறி அடுப்பை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. சில இடங்களில் மண்ணெண்ணெய் அடுப்பையும் மீண்டும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஒரு உணவக உரிமையாளர் நகைச்சுவையாக, "முன்னாடி ‘கேஸ் அடுப்பு ஸ்பெஷல்’ன்னு இருந்தது… இப்போ ‘விறகு அடுப்பு ஸ்பெஷல் சாம்பார்’ன்னு மாறி இருக்கு! ஆனா கஸ்டமருக்கு சாப்பாடு ரெடி பண்ணணும் என்பதால தான் இந்த மாற்றம்,” என சிரித்தபடி தெரிவித்தார்.
ஆனால் இந்த நிலை நீண்ட காலம் தொடர்ந்தால் உணவகங்களை நடத்துவது கடினமாகிவிடும் என உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் தட்டுப்பாட்டை சரி செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் சில வாடிக்கையாளர்கள், “எதுல சமைச்சாலும் பரவாயில்லை… சாப்பாடு ருசியா இருந்தா போதும்!” என நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்