பரதர் மாநாடு விவகாரம் தீவிரம்: மீனவ மக்கள் கட்சி தலைவர் கொந்தளிப்பு .!
தூத்துக்குடி: மார்ச் 1-ஆம் தேதி பனிமயமாதா ஆலயம் அருகே உள்ள வளாகத்தில் “பரதர் குல அரசியல் மாநாடு” நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு ஸ்டெர்லைட் காப்பர் நிர்வாகம் நிதியுதவி வழங்குவதாகவும், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வருவதற்கான முயற்சி நடைபெற உள்ளதாகவும் "ஐந்தாண்டு காலப் போராட்டத்தில் சேசையா வில்லவராயர் எந்த இடத்தில் இருந்தார்? எந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என்று மிகப்பெரிய ஒரு குற்றச்சாட்டை மீனவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அலங்கார பரதர் முன் வைத்துள்ளார்.
இது குறித்து அலங்கார பரதர் கூறும் போது, 30 ஆண்டுகளாக மீனவ மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.. நாளை நடைபெற உள்ள மாநாட்டை நடத்துபவர்கள் தங்களை பரதர் குலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் செம்படையர், கரையர் போன்ற பல அமைப்புகள் உள்ள போதிலும், அவர்களை யாரையும் அழைக்காமல் தெற்குப் பகுதியைச் சேர்ந்த பரதர்களை மட்டும் அழைப்பது ஏன்? மாநாட்டின் நோக்கம் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, தூத்துக்குடியில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த துயரச் சூழ்நிலையிலேயே இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்க உள்ள சேசையா வில்லவராயர், “எங்களுக்கு ஸ்டெர்லைட் வேண்டும்” என்று கருத்து தெரிவித்தார். இதுபோன்ற நிலைப்பாட்டை கொண்ட நபர் மாநாட்டிற்கு தலைமை தாங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பரதர் சமுதாயத்தில் தகுதி வாய்ந்த பலர் இருக்கிறார்கள். ஹேர்மன் மற்றும் எட்வின் பாண்டியன் போன்றோர் பல சமூகப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள்.. இத்தகைய சமூகப் பின்புலம் கொண்டவர்கள் தலைமை ஏற்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சமூகத்திற்கு துரோகம் செய்கிறார் என குற்றம்சாட்டப்படும் ஒருவரை முன்னிறுத்துவது சந்தேகங்களை உருவாக்குகிறது.
மேலும், மாநாட்டின் உயர்மட்ட குழுவில் (திமுக) கட்சியினரைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகவும், இது ஒரு அரசியல் நோக்கத்துடன் நடத்தப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது. சமுதாய மாநாடு என்றால் அது கட்சி சார்பற்றதாக இருக்க வேண்டும். இதன் பின்னணியில் அரசியல் திட்டமா, அல்லது கலவரத்தை உருவாக்கும் முயற்சியா?”
மாநாட்டிற்கு ஸ்டெர்லைட் காப்பர் நிர்வாகம் நிதியுதவி வழங்குவதாக தகவல்கள் பரவுகின்றன. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இதை பயன்படுத்துகிறார்களா?
“ஐந்தாண்டு காலப் போராட்டத்தில் சேசையா வில்லவராயர் எந்த இடத்தில் இருந்தார்? சமூக அமைப்புகளில் தலைவராக இருந்த வரலாறே இல்லை. தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், பரதர் சமூக மக்கள் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் கட்சி சார்பானவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று அலங்கார பரதர் தெரிவித்துள்ளார்.
மாநாட்டின் நோக்கம், நிதி ஆதாரம் மற்றும் அரசியல் பின்னணி குறித்து ஏற்படும் கேள்விகளுக்கு ஏற்பாட்டாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் மு.மணிகண்டன்