“தென் மாவட்டங்களில் மீனவர் சமூகம் திமுக பக்கம்?
தூத்துக்குடி: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் ஆளும் திமுக “200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் வேண்டும்” என்ற இலக்குடன் களமிறங்கியிருக்கிறது. மறுபக்கம் அதிமுக “ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும்” என்ற மனநிலையுடன் அரசியல் நகர்வுகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த அரசியல் சூழ்நிலையில், தென் மாவட்டங்களில் பெருமளவில் வசிக்கும் பரதர் (மீனவர்) சமூகத்தின் வாக்குகள் திமுகவிற்கு திரளாக செல்லும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.
சில காலங்களாகவே, மீனவ சமுதாய மக்கள் "நாங்கள் வாக்கு போட மட்டும் இல்ல… வேட்பாளராகவும் வரணும்!” என கூறி வந்தாலும், அது அரசியல் கட்சிகளின் காதுகளுக்கு சரியாக சென்றதே கிடையாது..
இந்த நிலையில் மார்ச் 1ஆம் தேதி “பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாடு” தூத்துக்குடி மாநகரில் நடைபெற்றது. அந்த மாநாட்டின் மனநிலையை ஒரு வரியில் சொன்னால் "மீனவர்கள் இனி வாக்கு வங்கியல்ல… சீட் வங்கியாக மாறப் போகிறோம் என்பதே., அந்த மாநாட்டில், பரதர் மக்கள் அதிகம் வசிக்கும் கடலோர தொகுதிகளில் அவர்களுக்கே வேட்பாளர் வாய்ப்பும், மாநிலங்களவைத் தேர்தலில் பரவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திமுக வாய்ப்பு வழங்க வேண்டும் போன்ற 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது வெறும் மேடைக் கோஷங்களாக போய்விடுமா என்ற கேள்வி எழுந்த நேரத்தில், திமுக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது..
நெல்லை மாவட்டம் கூத்தங்குளியை பூர்வீகமாகக் கொண்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது தான்..
இதனால் மீனவர்கள் முதல்வர் மு.க ஸ்டாலினை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இதன் மூலம் தென் மாவட்டங்களில் பரதர் சமூகத்தின் வாக்குகள் திமுகவுக்கு “கொத்தாக” சென்றுவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
தென் மாவட்டங்களில் பலமாக இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கி மற்றும் மீனவர் சமுதாய வாக்குகள் ஒரே பக்கம் திரண்டுவிட்டால் அது தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.. அது திமுகவிற்கு தற்போது முழுவதுமாக கிடைத்துள்ளது..
இதற்கிடையில் அதிமுக இன்னும் உள் பிரச்சனைகளால் சிதறிக் கிடக்க, பாஜக தமிழ்நாட்டில் வேரூன்ற முயற்சி செய்ய, நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து “விசில்” அடித்து கொண்டிருக்க, திமுக ஒரு பக்கம் கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக, மற்றொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு போன்றவை அரசியல் களத்தில் “மெகா மேக்னட்” போல மாறி இருக்கிறது. திமுக பல கட்சிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்தாலும் மீனவ சமுதாய மக்கள் தவெகவிற்கு வாக்களிக்க தயாராக இருந்தனர். ஆனால், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டதன் மூலம் திமுக தென் மாவட்டங்களில் மீனவர் சமூகத்தின் வாக்குகளை பெருமளவில் ஈர்த்துள்ளது என்பது தான் நிதர்சன உண்மை...
ஆகவே, தென் மாவட்டங்களில் திமுக எடுத்துள்ள அரசியல் நகர்வுகள், 2026 தேர்தலில் என்ன மாதிரியான அரசியல் முடிவை உருவாக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
செய்தியாளர் மு.மணிகண்டன்