“நெரிசலும் அவதியும் தொடருமா? 1ம், 2ம் கேட் தீர்வு எப்போது?”

“நெரிசலும் அவதியும் தொடருமா? 1ம், 2ம் கேட் தீர்வு எப்போது?”

தூத்துக்குடி மாநகரில் ஒன்றாம் கேட், இரண்டாம் கேட் பகுதிகளில் ரயில்வே கேட் அடிக்கடி அடைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எப்போது தான் நிரந்தர தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடியும் தொடர்ந்து அதிகரிக்கிறது. மாநகர பகுதியில் மொத்தம் 4 ரயில்வே கேட்கள் உள்ளன. இதில், 1ம் மற்றும் 2ம் ரயில்வே கேட் பகுதிகள் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இவ்விரு கேட்களுக்கிடையே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள 1ம் கேட் பகுதியில் தினமும் பல தடவை ரயில்கள் மற்றும் ரயில் எஞ்சின்கள் கடந்து செல்லும் காரணமாக கேட் அடைக்கப்படும் சூழ்நிலை தொடர்கிறது. தற்போது அதே நிலை இரண்டாம் கேட் பகுதியிலும் நிலவி வருவதால் பொதுமக்கள் வெறுத்துப் போயுள்ளனர்.

மேலும், ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் 1ம் கேட் சில நேரங்களில் முற்றிலுமாக மூடப்படுவதால், பொதுமக்கள் இரண்டாம் கேட்டை மட்டுமே நம்பி சாரை சாரையாக சென்று வருகின்றனர். இதன் காரணமாக காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பணிக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் பல மணி நேரம் கேட் பகுதியில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் 2ம் ரயில்வே கேட் மற்றும் சிவன் கோவில் பகுதி சுற்றுவட்டாரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கேட் திறந்த பின்பும் அந்தப் பகுதியை கடக்க பல மணி நேரம் ஆகும் சூழ்நிலை தொடர்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

2வது ரயில்வே கேட் பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு முக்கிய பாதையாக செயல்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பொருத்தமான உள்கட்டமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பள்ளி நேரத்தை கருத்தில் கொண்டு காலை, மாலை நேரங்களில் ரயில் நேர மாற்றம் செய்யும் வாய்ப்பையும் பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், மாநில அரசு பாலம் கட்டுவதற்கு மத்திய ரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்தால், அந்த இடத்தில் மேம்பாலம் அல்லது கீழ்பாலம் அமைக்கும் பணியை மத்திய ரயில்வே மேற்கொள்ள வேண்டியது சட்டப்பூர்வமான நடைமுறையாகும். இந்த பணிகள் பெரும்பாலும் மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட்டின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. 

ஆகவே, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்கள் நீண்டநாளாக எதிர்பார்த்து வரும் 2ம் கேட் பாலம் அமைக்கும் பணியை முன்னெடுக்க வாக்குறுதி அளிப்பார்களா? அல்லது தேர்தல் நேரத்தில் மட்டும் பேசப்படும் மற்றொரு வாக்குறுதியாகி விடுமா?

தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா என்பதை மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

செய்தியாளர் மு.மணிகண்டன்