தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்கு இருமுறை டெண்டர்: உயர்நீதிமன்றம் ஆணையர் நியமித்து ஆய்வு செய்ய உத்தரவு.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் மூத்த வழக்கறிஞரை ஆணையராக நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 04.04.2025 அன்று மின்னணு ஏல அறிவிப்பு வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மொத்தம் ஐந்து பணிகள் இடம்பெற்றிருந்தன.
அவற்றில் 1, 2 மற்றும் 5ஆம் இலக்க பணிகள் குறித்து மனுதாரர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதாவது, தூத்துக்குடி மாநகராட்சி 12வது வார்டில் பி.என்.டி. நகரில் பூங்கா அமைத்தல், மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறச் சாலையில் நடைபாதை பயிற்சிக்காக தார் சாலை அமைத்தல் மற்றும் கருப்பட்டி சொசைட்டி சந்திப்பில் உள்ள போக்குவரத்து வட்டப்பாதைக்கு வேலி அமைத்து மின்விளக்குகள் பொருத்துதல் ஆகிய பணிகளுக்காக டெண்டர்கள் விடப்பட்டிருந்தன.
ஆனால், இந்த மூன்று பணிகளும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு கடந்த 17.02.2025 அன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அமைச்சருமான கீதா ஜீவன் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்காக மீண்டும் டெண்டர் விடுவது சட்டவிரோதமானது என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் அந்த டெண்டர்களுக்கு இடைக்கால தடை உத்தரவும் பெறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன்பு இன்று (11.03.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஆஜராகி அரசுத் தரப்பில் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மூன்று பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய ஒரு மூத்த வழக்கறிஞரை நீதிமன்ற ஆணையராக நியமித்து, அதற்கான அறிக்கையை வரும் 18.03.2026 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரே பணிக்காக இருமுறை டெண்டர் விடப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் ஆணையரை நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் மு.மணிகண்டன்