தூத்துக்குடியில் கடத்தலுக்கு பதுக்கி வைத்திருந்த விராலி மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்.!

தூத்துக்குடியில் கடத்தலுக்கு பதுக்கி வைத்திருந்த விராலி மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்.!

தூத்துக்குடி: தூத்துக்குடி, தாளமுத்து நகர் அருகே இலங்கைக்கு விராலி மஞ்சள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவரின் தலைமையில் உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் மற்றும் போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கீழ அலங்கார தட்டு பகுதியில் உள்ள ஆரோக்கிய மேரி (டென்னிஸ் மனைவி) என்பவருக்கு சொந்தமான, ஆஸ்பெஸ்டஸ் சீட் கூரையுடன் கூடிய பழைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ எடையுடைய 32 மூட்டைகள் விராலி மஞ்சளும், சுமார் 15 கிலோ எடையுடைய 11 மூட்டைகள் பீடி இலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலான நடவடிக்கைக்காக பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தூத்துக்குடி சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.