"சரக்கு பார்" ஆக மாறிய ஆரம்ப சுகாதார நிலையம்.,

"சரக்கு பார்" ஆக மாறிய ஆரம்ப சுகாதார நிலையம்.,

தூத்துக்குடி மாநகர், பாத்திமா நகர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி வாசிகள் குற்றசாட்டு.!

தூத்துக்குடி மாநகர், பாத்திமா நகர் அருகே உள்ள புல் தோட்டம் என்ற பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனை தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அங்கு ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உடற்பயிற்சி கூடம், தண்ணீர் தொட்டி ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில், வாயிலில் கேட் இல்லாததால் பலர் அங்கு மது குடித்து விட்டு சமூக விரோத செயல்களுக்காக அந்த சுகாதார மையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அங்கு மது அருந்தி விட்டு அங்குள்ள கண்ணாடியை உடைப்பது, அங்குள்ள மருத்துவர், செவிலியர்களிடம் தூக்க மாத்திரை வேண்டும் என மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதற்கு தயங்குவதாகவும், அங்கு பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிவதாகவும் கூறுகின்றனர். மேலும், சுகாதார சீர்கேடு நிறைந்து கிடப்பதால் தினமும் அதனை பார்த்து முகம் சுழித்து கொண்டு அதனை சுத்தப்படுத்தக்கூடிய பணியையும் செய்து வருகின்றனர்.. இது சம்பந்தமாக, மாநகராட்சி நிர்வாகத்திடம் எடுத்து கூறியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. 

இது போன்ற சமூக விரோத செயல்களால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுவதால் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா கவனம் செலுத்தி இங்கு ஆய்வு மேற்கொண்டு உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கென்று தனி சுற்று சுவர் எழுப்பி தர வேண்டும், கண்காணிப்பு கேமராவும் பொறுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அங்குள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து தான் சுற்றியுள்ள 6 வார்டுகளுக்கும் தண்ணீர் செல்கிறது. ஆனால் அதனை பாதுகாக்க பாதுகாவாலர் இல்லை.. இதனால் சமூக விரோதிகள் வேங்கை வயல் பிரச்னை போன்று இங்கேயும் செய்திட கூடுமோ என்ற அச்சமும் உள்ளதாக 46வது வார்டு வட்டக் கழகச் செயலாளர் புல்டன் ஜெசின் கூறி இருக்கின்றார். 

நியாயமான கோரிக்கை என்பதால் மாநகராட்சி நிர்வாகம் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தி நோயாளிகளும், பணியாளர்களும் அச்சமின்றி வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

செய்தியாளர் :மு.மணிகண்டன்