தமிழக வெற்றிக் கழகம் ஆதரவாளர் வீடியோ சர்ச்சை.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். தீவிர விஜய் ரசிகரான இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளராக இருந்து வருகிறார். மேலும், கிருஷ்ணா நகரில் தளபதி மொபைல்ஸ் என்ற பெயரில் மொபைல் கடையும் நடத்தி வருகிறார். கடையின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் நடிகர் விஜயின் புகைப்படங்கள். தவெக கட்சிக்கொடி புகைப்படம் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் வைத்திருந்தார். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் போலீசார் அவரது மொபைல் கடையின் வெளியே இருந்த டிஜிட்டல் போர்டுகளை அகற்றியது மட்டுமின்றி கட்சிக் கொடியுடன் விஜய் இருந்த புகைப்படங்களை மறைத்துள்ளனர். மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் போர்டு மற்றும் புகைப்படங்கள் வைத்திருந்ததாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திலும் கடை உரிமையாளரான விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மொபைல் கடை உரிமையாளர் விஜய் தனது instagram பக்கத்தில் போலீசார் தனது கடையில் போர்டுகள் அகற்றியது பற்றி சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
போலீசார் தெரிவித்து இருந்தால் அதை நானே அகற்றி இருப்பேன். வேறு புகைப்படங்களை வைத்திருந்திருப்பேன். எனது கடையில் உள்ள ஸ்டிக்கரில் இருப்பது எனது புகைப்படம் தான் தூரத்தில் இருந்து பார்த்தால் அது விஜய் போன்று தெரியும். அருகில் வந்து பார்த்தால் தான் நான் என்று தெரியும். நானும் அண்ணன் (விஜய்) லுக்கில் தான் இருப்பேன். நான் ஒன்றும் சிஎம் வேட்பாளர் கிடையாது அந்த புகைப்படத்தில் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
என்னுடைய பெயரும் விஜய் தான் எங்கள் ஊரில் என்னை செல்லமாக தளபதி என்று தான் சொல்வார்கள். நானும் தளபதி தான்டா.. போலீசார் அகற்றுவதை எவனெல்லாம் வெளியிலிருந்து பார்த்து சிரித்தானோ, என் வீடியோ பார்த்து ரசித்தானோ அவங்க சாவு கொடுமையாக இருக்கும்.
விபத்தில் சாவீர்கள் இல்லை தூக்கு மாட்டி சாவீர்கள். இல்ல தீக்குளிச்சு சாவீர்கள் உங்களுக்கு நல்ல சாவே வராது. நான் வயிறு எரிஞ்சு சொல்கிறேன் என்று கையில் வேலுடன் மொபைல் கடை உரிமையாளர் விஜய் வீடியோவில் பேசியுள்ளார்.
மற்றொரு வீடியோவில் எங்க ஊரில் சில அதிமுக, திமுக நிர்வாகிகள் கட்சி சின்னத்தை கையில் பச்சை குத்தி உள்ளனர். அவங்க கையில் பச்சை குத்தியதை பார்த்து யாரும் ஓட்டு போட்டு விடக்கூடாது. தேர்தல் முடியும் வரை அவர்கள் கையை வெட்டி விடுங்கள். தேர்தல் முடிந்த பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
மற்றொரு வீடியோவில், போலீசார் என்னுடைய கடையின் பேனர்களை கிழித்த போது அவர்கள் ரோட்டில் நின்று பார்த்து சிரித்து என்ஜாய் பண்ணிட்டு போனாங்க. அது எனக்கு பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது. ஏற்கனவே என்னுடைய வாழ்க்கையில் நாள்தோறும் அழுது கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறி கண்ணீர் விடுகிறார்.
தனது கடை தனது கோவில் மாதிரி என்றும், தளபதி பெயரில் வைத்து பலருக்கு உதவி செய்துள்ளேன். எனக்கு பிரச்சனை என்று வரும்போது தமிழக வெற்றி கழகத்தினர் யாரும் வரவில்லை என்று வசனத்துடன் பாட்ஷா படத்தில் இடம் பெற்றுள்ள டயலாக் ஒன்றையும் இணைத்து மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ளார். சிங்கம் மற்றும் கத்தி படங்களிடம் பெற்ற பாடல் வசனங்கள் வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோக்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்