“கபாடபுரமும் தென்மதுரையும்: மறைந்த தமிழர் வரலாற்றை தேடும் ஒரு முயற்சி”

“கபாடபுரமும் தென்மதுரையும்: மறைந்த தமிழர் வரலாற்றை தேடும் ஒரு முயற்சி”

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பி. ராஜேஷ் செல்வரதி ஒரு சிறந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர். இவர் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மறைந்து கிடக்கும் பழமையான வரலாற்றுச் சுவடுகளைத் தேடி கண்டறிந்து அவற்றை ஆய்வு செய்து வெளிக்கொணரும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

பழமையான கோயில் சிற்பங்கள், கல்வெட்டுகள், புதைபடிமங்கள், சங்ககால மற்றும் நடுநிலை கால தொல்லியல் சான்றுகள் போன்றவற்றை கண்டறிந்து அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை விளக்குவது அவரது முக்கிய பணியாக உள்ளது.

குறிப்பாக, தூத்துக்குடி அருகே உள்ள பட்டினமருதூர் பகுதியில் இடைச்சங்க காலத்தைச் சேர்ந்த பல சிற்பங்கள் இருப்பதை ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதியில் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் சிற்பங்கள் இருப்பதையும் ஆய்வு செய்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். மேலும் தூத்துக்குடி அருகே 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு இருப்பதை கண்டறிந்து தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதற்கு மேலாக பட்டினமருதூர் பகுதியில் பழமையான சுடுமண் பெண் தெய்வச் சிலை இருப்பதைப் பற்றிய தகவல்களையும் பதிவு செய்துள்ளார். மீன் புதைபடிமங்கள், சிப்பி புதைபடிமங்கள் போன்ற பல இயற்கை மற்றும் தொல்லியல் சான்றுகளை கண்டறிந்து அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தை ஆராய்ந்து விளக்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழமையான வரலாற்று அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பல தொல்லியல் தளங்களில் அரசு முறையான ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசிற்கும் தொடர்ந்து மனுக்கள் அளித்து வருகிறார். 

இவரின் இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக, “கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே?” என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

இந்த புத்தகத்தை தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் பாலசுப்பிரமணியன் வெளியிட, “முத்தமிழ் காவலர் என்று சொல்லகூடிய விசுவநாதம்” விருது பெற்ற முனைவர் செல்லப்பா ஆகியோர் பெற்றுக் கொண்டார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வரலாற்று வித்வான் சதாசிவ பண்டாரத்தாரின் பேரன் சிவசுப்பிரமணியன் (சிதம்பரம்) குலாம் அகமது (காயல்பட்டினம் வரலாற்று பாதுகாப்பு கழகம்) கருப்பசாமி (அனுசக்தி துறை – பழையகாயல்) செல்வின் (அழகப்பா பல்கலைக்கழகம் – தூத்துக்குடி) எழுத்தாளர் மாரிமுத்து (யாக்கை அறக்கட்டளை) குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பாக முன்னெடுத்து நடத்தினர். தொல்லியல் துறை தலைவர் (பொறுப்பு) சுதாகர், உதவி பேராசிரியர்கள் மதிவாணன், முருகன், ரமேஷ் பெரியசாமி, மற்றும் உதவி பேராசிரியை சந்தியா ஆகியோர் கருத்துரைகளும் வாழ்த்துரைகளும் வழங்கினர்.

கட

ந்த மூன்று ஆண்டுகளாக தருவைக்குளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அவர் மேற்கொண்ட ஆய்வுகளில் பல தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகம் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறையின் பரிந்துரையின் படி 14.03.2025 அன்று வெளியான 2025-26 மாநில நிதிநிலை அறிக்கையில், பட்டினமருதூர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு தொல்லியல் தளமாக அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

தொடர்ந்து அப்பகுதியில் புல ஆய்வுகள் நடத்தப்பட்டு பல அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நீண்டகால ஆய்வு அனுபவங்கள், அறிவியல் ஆதாரங்கள், தொன்மையான வரலாற்றுச் சுவடுகள், வரைபடங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஆகியவற்றை ஆவணமாக தொகுத்து, தமிழர்களின் வரலாற்றில் புதிராக உள்ள கடலில் மூழ்கிய தென்மதுரை மற்றும் கபாடபுரம் குறித்து சிந்திக்க வைக்கும் கேள்விகளின் தொகுப்பாக இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சமூகத்தினரும் குறிப்பாக வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்களும் இந்த தரவுகளை ஆய்வு செய்து, மறைந்து கிடக்கும் தமிழர்களின் உண்மையான வரலாற்றை ஆராய்ந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதே ஆகும் இவ்வாறு பி. ராஜேஷ் செல்வரதி தனது ஆய்வுகள், ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சி செய்து வரும் அர்ப்பணிப்பான வரலாற்று ஆர்வலராகத் திகழ்கிறார்.