கப்பல் கட்டு தளம் வந்தால் தூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு? உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கூறுவது என்ன.!
தூத்துக்குடியில், கப்பல் கட்டும் தளம் அமையப்பெற்றால் தூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என உப்பள தொழிலாளர்கள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்-டம் அவர்களின் மன குமுறல்களை கொட்டி தீர்த்துள்ளனர்..
என்ன நடந்தது., விரிவாக பார்க்கலாம்.!
தூத்துக்குடி மாநகரில் உள்ள முள்ளக்காடு, முத்தையாபுரம், பழைய காயல், கோவளம் கடற்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஏக்கரில் உப்பு உற்பத்தியானது நடைபெற்று வருகிறது. இதை நம்பி சுமார் 20,000 ஆண், பெண் தொழிலாளர்கள் உள்ளனர். மேலும், கோவளம் கடல் பகுதியில் மீன் பிடித்தலிலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், முள்ளக்காடு, முத்தையாபுரம், பழைய காயல், ஆகிய பகுதிகளில் சுமார் 3000 ஏக்கரில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட எந்தவித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை.
இந்த நிலையில், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடியில், சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, இந்த பிரச்சனையை அறிந்த அவர், இன்று பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களை கப்பல் கட்டும் தளம் அமைய இருக்கும் இடத்தில் அதாவது, உப்பு உற்பத்தி நடைபெறும் இடத்தில் சந்தித்து பேசினார்.
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்-டம் உப்பு தொழிலை பற்றி உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் அவர்களின் மன குமுறல்களை கொட்டி தீர்த்தனர்.
அதாவது, கடந்த 2013ல் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த திட்டத்தை கொண்டு வந்தபோது உப்பு தொழிலாளர்களின் நிலைமையை எடுத்துரைத்தோம். அதனை கேட்ட அவர், உடனடியாக ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழிலா என திட்டத்தை ரத்து செய்தார். அதேபோன்று கலைஞர் கருணாநிதி இருக்கும்போதும் இந்தத் திட்டத்தை கொண்டு வந்தார். அப்போதும் எதிர்ப்பு தெரிவித்தோம். பின்னர், இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் தற்போதைய முதல்வரிடம் இதனை எடுத்து கூற முடியவில்லை..
தமிழ்நாடு- ஆந்திரா எல்லைப் பகுதியில், 250 முதல் 300 ஏக்கரில் கப்பல் கட்டும் தளம் உள்ளது. ஆனால், தூத்துக்குடியில் 3000 ஏக்கர் வேண்டும் என்கின்றார்கள்.. துறைமுகம் அருகிலேயே கூட இதற்கான இடம் உள்ளது. ஆனால், இந்த உப்பளப் பகுதியில் ஏன் கப்பல் கட்டும் தளம் அமைக்க முற்படுகின்றார்கள் என்று தெரியவில்லை..80 ஆயிரம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது. இங்கு தான் கப்பல் கட்டும் தளம் அமைப்பேன் என்றால் என்ன அர்த்தம்., விளாத்திகுளம் பகுதியில் தரிசு நிலம் அதிகமாக இருக்கிறது. அங்கு செல்லாமல் இங்கு ஏன் வருகின்றார்கள். அரசியல் தலையீடு உள்ளதோ என்று தான் என்ன தோன்றுகிறது.
தூத்துக்குடி எம்பி கனிமொழியிடம் இரண்டு முறை எடுத்து கூறியிருக்கின்றோம். உங்கள் இடத்தில் எக்காரணத்தைக் கொண்டும் கப்பல் கட்டும் தளம் அமைக்க பட மாட்டாது என்று கூறினார்.. பின்னர், ஒரு நாள் தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர்பி ராஜா எங்களை 4 பேர் மட்டும் வாருங்கள் என்று கூறி வரவழைத்து இந்த இடத்தை விட்டு நீங்கள் போய்விட வேண்டும் என்று கூற நாங்கள் 93 வருடமாக இங்கு தான் இருக்கின்றோம். எங்கேயும் போக மாட்டோம் என்று கூறி வந்தோம்..
2023ல் தூத்துக்குடியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இந்த உப்பள பகுதியை கடந்து தான் மழை நீர் கடலுக்கு சென்றது. கப்பல் கட்டும் தளம் அமைத்தால் இந்த இடத்தில் காம்பவுண்ட் சுவர் கட்டப்படும். அப்போது மழை நீர் கடலுக்கு செல்ல வழி இருக்காது. ஊருக்குள் தான் மழை நீர் கட்டும்.. இதனால் விவசாயம் பாதிக்கும். வாழை, நெல் பாதிப்பு ஏற்படும். குலையன்கரிசல், கூட்டாம்புளி, சிவத்தையாபுரம் வரை விவசாயம் முற்றிலும் அழிய கூடும்.
கப்பல் கட்டும் தளத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. தொழிற்சாலை எங்கு வேண்டுமானாலும் கட்டலாம். உப்பு உற்பத்தி இங்கு மட்டும் தான் செய்ய முடியும்.. எங்களின் உயிர் நாடியே இந்த உப்பு உற்பத்தி தொழில் தான் என்று குமுறினர்..
பின்னர், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறும் போது, தூத்துக்குடி-யில் உள்ள உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் கொண்டுவரும் பட்சத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் போல் ஓர் சூழ்நிலை உருவாகும். உப்பள தொழிலாளர்களின் பிரச்சனையை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வேன். வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணியில் இருக்கும் கட்சி தான் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அப்போது உப்பள உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்று அங்கிருந்து கிளம்பி சென்றார்..
செய்தியாளர் : மு.மணிகண்டன்