“என் பெயர் ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன்” – மத அரசியல் சர்ச்சை.!

“என் பெயர் ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன்” – மத அரசியல் சர்ச்சை.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உடன்குடி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் திருச்செந்தூர் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்தித்தார்.

அப்போது மணப்பாடு பகுதியில் பேசிய அவர், “என் பெயர் அனிதா ராதாகிருஷ்ணன் அல்ல... ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன்” என கூறினார்.. மேலும், “ஜோசப் என்றவுடன் ஓட்டு போட்டீங்களா?” எனக் கேட்டார்.

அதனைத் தொடர்ந்து, “எங்கள் தலைவர் ஸ்டாலின் மதத்தை பார்த்தாரா?” என கூறியதும், இந்த பேச்சு மத உணர்வுகளை அரசியலுடன் இணைக்கும் முயற்சியாக விமர்சிக்கப்பட்டது. 

மேலும் அவர், தற்போதைய ஆட்சி இன்னும் 4 முதல் 6 மாதங்களில் கவிழும் என்றும், “முதல்வர் உட்காரும் நாற்காலியின் மூன்று கால்கள் திமுகவின் கால்கள்” என்றும் பேசிய அவர், நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் விஜய் குறித்து, “சின்னப் பிள்ளைகளை வைத்து பெரியவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய விஜய்க்கு மக்கள் பதில் தருவார்கள்” என கடுமையாக விமர்சித்தார்.

அதேபோல், காங்கிரஸ் கட்சியினரையும் தாக்கி, “வெற்றி பெற்றவுடன் பெட்டியை கட்டிக்கொண்டு போய்விட்டார்கள்” என குற்றம்சாட்டினார்.

அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது மத அடிப்படையிலான அரசியல் குறித்த அவரது பேச்சும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..