சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்., தனித்து விடப்பட்டதா தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி?

 0
சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்.,  தனித்து விடப்பட்டதா தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி?

சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த எந்த நிர்வாகம் வரவேண்டும்., மக்கள் படும் துயரம் ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லையா?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையுரணி பஞ்சாயத்து, சோட்டையன்தோப்பு அருகே உள்ள தொழுநோய் மருத்துவமனை முன்பு மழை நீர் தேங்கி உள்ளது. இந்த பகுதியில் கடந்த 3 நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் இதனை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டால் இது தங்களது பகுதி அல்ல என கூறுவதாகவும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டால் பஞ்சாயத்து தலைவர்  பதவி தனக்கு தற்போது இல்லை என கூறுவதாகவும் பாதிக்கப்பட்ட பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இப்பகுதி வழியாக செல்லக்கூடிய பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்படுகிறது. இன்று காலை மட்டும் 3 மாணவிகள் பள்ளம் தெரியாமல் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு இந்த மழை நீரை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

தூத்துக்குடிக்கு மிக அருகாமையில் உள்ள இந்த தொகுதி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியோடு உள்ளதால் சட்டமன்ற உறுப்பினரை ஓட்டப்பிடாரம் வரை சென்று சந்தித்து முறையிட முடியவில்லை. எனவே ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.