போலியான கடிதமா? பரதர் நல சங்கத்தினர் கொந்தளிப்பு… தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் விவகாரம்: பரதர் நல சங்க கடிதம் போலியா? அரசியல் வட்டாரத்தில் சூடு.!
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் நடிகர் விஜய் (த.வெ.க) கட்சியும் அரசியல் களத்தில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அஜிதா ஆக்னல், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்தார். பின்னர், கட்சியில் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியின் காரணமாக, அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு சென்று கட்சி தலைவர் விஜய்யின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி அஜிதா ஆக்னல் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சில நாட்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர், மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல் ராஜ் தூத்துக்குடியில் இருக்கிறாரா? என்பதே தெரியாத நிலையில், பல்வேறு சமூக நலப் பணிகளை அஜிதா ஆக்னல் தொடர்ந்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அஜிதா ஆக்னல் விருப்ப மனு அளித்துள்ளார். இதனிடையே, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான 2026 தேர்தலில் அஜிதா ஆக்னலை கட்சியின் வேட்பாளராக பரிசீலிக்க வேண்டும் என முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கம் சார்பில் ஒரு கடிதம் சென்னை பனையூர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து தூத்துக்குடி தொகுதியில் நகர்ப்புறம், கிராமப்புறம், மீனவர் குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் கொள்கைகளை கொண்டு சேர்த்தல், உறுப்பினர் சேர்க்கை, சமூக நலப் பணிகள், நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் அஜிதா ஆக்னல் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் சாதி–மத வேறுபாடின்றி பொதுமக்கள் ஆதரவை பெற்றுள்ளார்.
அஜிதா ஆக்னல் பரவர் (மீனவர்) சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இன்று தூத்துக்குடி தொகுதியில் அனைத்து சமூக மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக உருவெடுத்துள்ளார்.. மக்கள் பிரச்சினைகளை நேரில் கேட்டு, உடனடி தீர்வு முயற்சிகளில் ஈடுபடும் அவரது அணுகுமுறை, வருங்கால சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதியை வெளிப்படுத்துகிறது. ஆகவே, தூத்துக்குடி தொகுதியில் வெற்றியை பெற்றுத் தரக்கூடிய வேட்பாளராக இருப்பார் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்த கடிதத்திற்கும் முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கத்தினருக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று சங்க நிர்வாகிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து, சங்க தலைவர் கனகராஜ் பர்னாந்து, பொதுச் செயலாளர் ராஜி பர்னாந்து, பொருளாளர் மிக்கேல் ஆகியோர் இணைந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், "சங்கத்தின் லெட்டர் பேடு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் எந்த கடிதமும் அனுப்பவில்லை. இது முறைகேடு மற்றும் சட்ட விரோத செயல். சங்கத்தை இழிவுப்படுத்தும் விதமாகவும் ஏமாற்றும் நோக்கத்துடனும் இந்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.
21.2.2026 அன்று தூத்துக்குடியில் நடைபெற உள்ள பரதர் குல மாநாட்டை சிதைக்கும் நோக்கத்துடன் இந்த கடிதம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்றும், போலி கடிதத்தை தயாரித்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜிதா ஆக்னல் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? அல்லது இந்த கடித சர்ச்சை புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
செய்தியாளர் மு.மணிகண்டன்