தூத்துக்குடி பாரம்பரியத்தை பாதுகாக்க மேயர் ஜெகன் பெரியசாமி எடுத்த முக்கிய நடவடிக்கை!
தூத்துக்குடி மாநகரின் வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மேற்கொண்ட நடவடிக்கை தற்போது முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான தியாகி “சட்டிக் கொட்டு சாமுவேல்" பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில் தூத்துக்குடி சட்டமன்ற (1958) உறுப்பினராக இருந்த இவர் 29.07.1959 இல் பாத யாத்திரையாக வந்த பூதானத் தொண்டர்களை வரவேற்று அழைத்து வருகையில் (இரயில் நிலைய இரண்டாம் கேட் அருகே) மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், 26.07.1960ல் அவ்விடத்தில் நினைவுச் சின்னம் இவருக்கு எழுப்பப்பட்டு அன்றைய மாநில அமைச்சர் வெங்கட்ராமன் திறந்து வைத்துள்ளார்.
நாட்டின் விடுதலைக்காகச் சிறைவாழ்வு ஏற்ற சாமுவேல் நாடார் இறுதிவரை நாட்டுக்காகவே வாழ்ந்தார்.. இவரின் நினைவுச் சின்னம் கேட்பாரற்று போஸ்டர் ஒட்டும் சுவர் போல மாறியுள்ளதை சமூக ஆர்வலர்கள் கவலையுடன் சுட்டி காட்டினர். இது குறித்து நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்த நிலையில், நேற்று இரவு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். நினைவுச் சின்னத்தை சீரமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பராமரிப்பது மாநகராட்சியின் கடமை எனவும் மேயர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியின் பாரம்பரியத்தை பாதுகாக்க இது ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுவதாக பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்..
செய்தியாளர் : மு.மணிகண்டன்