புதிய தலைமுறை தொலைக்காட்சியை முடக்கியது ஏன் மக்கள் கொந்தளிப்பு.!

 0
புதிய தலைமுறை தொலைக்காட்சியை முடக்கியது ஏன் மக்கள் கொந்தளிப்பு.!

ஊடகங்கள் தி.மு.க அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டுமா? மக்கள் பிரச்னைகளை வெளிக் கொண்டுவரும் புதிய தலைமுறை தொலைக்காட்சியை முடக்கியது ஏன்? தூத்துக்குடி மக்கள் கொந்தளிப்பு.!

நடுநிலை இதழியலுக்கு மக்களிடையே பெயர்பெற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி, அரசு கேபிளில் கடந்த வாரம் முதல் தெரியாதது குறித்து தூத்துக்குடி பொதுமக்கள் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். 

கடந்த 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்ட போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்தநிலையில், தி.மு.க அரசின் தவறை சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை சேனல் அரசு கேபிளில் இருந்து முடக்கப்பட்டுள்ளது.

ஆம், தமிழ்நாட்டின் அரசு கேபிள் நிறுவன இணைப்புகள் உள்ள பல்வேறு ஊர்களிலும் புதிய தலைமுறை சேனல் தெரியவில்லை. அரசு கேபிள் நிறுவனத்தின் கீழ் கேபிள் இணைப்பைப் பெற்றிருப்பவர்களுக்கு வழக்கமாக 44 எனும் எண்ணில் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பாகும். ஆனால், இப்போது காட்சியே தெரியவில்லை.

மக்களுக்கு கேபிள் சேவையை வழங்கும் நிறுவனம் எதுவாயினும், எல்லா தொலைக்காட்சிகளும் மக்களைச் சென்றடைய பாலமாகச் செயல்படுவதே கேபிள் சேவைக்கான நெறியாகும். இத்தகு பின்னணியில் புதிய தலைமுறை சேவை முடக்கப்பட்ட பின்னணி என்ன என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் நடுநிலையான இதழியலுக்குப் பெயர் பெற்ற தொலைக்காட்சி என்பதோடு, எப்போதுமே மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் தொலைக்காட்சியாகவும், பெருவாரி மக்களால் பார்க்கப்படும் முன்னணி தொலைக்காட்சியாகவும் திகழ்வது புதிய தலைமுறை. இப்படிப்பட்ட சூழலில், புதிய தலைமுறையின் சேவை நிறுத்தப்பட்ட காரணம் என்ன என்ற கேள்வியைப் பலரும் எழுப்பிவருகின்றனர்.

ஊடகங்கள் தி.மு.க அரசின் ஊதுகுழலாகச் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? முதலமைச்சர் என்று தூத்துக்குடியை சேர்ந்த மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.