47 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட பல கோடி நிலம் மீட்பு: புதிய சாலை பணி தொடக்கம்.,
47 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட பல கோடி நிலம் மீட்பு: புதிய சாலை பணி தொடக்கம்., மீனாட்சிபுரம் வழியாக புதிய சாலை: பொதுமக்களுக்கு விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.!
தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட எட்டயபுரம் ரோட்டில், பால்சன் ஹோட்டல் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று மாலை மேயர் ஜெகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கடந்த 47 ஆண்டுகளாக 3 தனிநபர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து செய்து வந்தது தெரியவந்தது.
ஆக்கிரமிப்பாளர்கள் இது தங்களது இடம் என்றும், நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் மாநகராட்சி ஆவணங்களை ஆய்வு செய்ததில் அது மாநகராட்சி நிலம் என்பதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அங்கு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சாலை, எட்டயபுரம் ரோடு-சுரேஷ் அகாடமி (வடபுறம்)- மீனாட்சிபுரம் -அரவிந்த் கண் மருத்துவமனை வழியாக- ஜெயராஜ் ரோடு வரை செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. பல கோடி மதிப்புள்ள இந்த இடத்தை ஆக்கிரமித்தவர்களில் ஒருவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 3ம் கேட் மேம்பாலம் கீழ், அருள்ராஜ் மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி இடத்தில் பாலடைந்த கட்டிடம் ஒன்றும் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதையும் மேயர் ஆய்வு செய்து அங்கு சாலை அமைக்கும் பணியும் விரைவில் நடைபெற உள்ளது.
இந்த சாலை அமைக்கப்பட்டால், மீனாட்சிபுரம் வழியாக பழைய பேருந்து நிலையத்தை எளிதாக சென்றடைய முடியும் என்பது குறிப்பிடதக்கது.
செய்தியாளர் மு.மணிகண்டன்