காதல் விவகாரம் துயரமாக முடிந்தது., நடந்தது என்ன.!

காதல் விவகாரம் துயரமாக முடிந்தது., நடந்தது என்ன.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சஞ்சய் (18) இவர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த உறவிற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தும் காதலை விட சஞ்சய் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சஞ்சய் தனது நண்பர்களுடன் சென்னை செல்லும் நோக்கில் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அந்த பெண்ணின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு வந்து சஞ்சயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், அவர்கள் திடீரென சஞ்சயை கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சஞ்சய்க்கு கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலை கண்ட நண்பர்கள் அச்சத்தில் ஓடிச்சென்றுள்ளனர். இருந்தபோதிலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சஞ்சயின் நண்பர்களை துரத்தி சென்று கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவருடன் இருந்த மாரிமுத்து என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து, காயமடைந்த சஞ்சய் மற்றும் மாரிமுத்துவை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், சஞ்சயின் நிலை மோசமானதால் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, பெண்ணின் தந்தை குமார், சங்கரநாராயணன் மற்றும் மாரிமுத்து ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாக, காதலியின் முன்னிலையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.