தூத்துக்குடியில் வண்ண விளக்குகள் திட்டம் தோல்வியா?
தூத்துக்குடியில் ரூ.98 லட்சம் மதிப்பில் வண்ண விளக்குகள் திட்டம், சில மாதங்களிலேயே தோல்வி!
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நகரை அழகுப்படுத்தும் நோக்கில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் வண்ண விளக்குகள் திட்டம் கடந்த 2024 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தில், தேசியக்கொடி வண்ணத்தில் ரூ.59 லட்சத்தி 84 ஆயிரத்தி 685 ரூபாய் மதிப்பிலும், சாதாரண வண்ண விளக்குகள் ரூ.38 லட்சம் மதிப்பு என மொத்தமாக ரூ. 98 லட்சம் செலவில் நகரின் முக்கிய சாலைகளின் சென்டர் மீடியன் மின் கம்பங்களில் அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டன.
ஆரம்பத்தில் மாநகரமே ஜொலித்தாலும் ,சில மாதங்களிலேயே விளக்குகள் பழுதடைந்து தற்போது பெரும்பாலான இடங்களில் முற்றிலும் செயலிழந்துள்ளன.. பல இடங்களில், விளக்குகள் தொங்கியபடி விடப்பட்டு பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த திட்டத்திற்கான டெண்டர் அபி எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (திருநெல்வேலி) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒப்பந்த விதிகளின்படி, விளக்குகள் குறைந்தது 3–5 ஆண்டுகள் செயல்பட வேண்டும். பழுதானால் ஒப்பந்ததாரர் உடனடியாக சரிசெய்ய வேண்டும். ஆனால் சரி செய்தது போல் தெரியவில்லை.
ஒப்பந்த தாரர் விதிமுறைகளை மீறினால் அபராதம் தொகை பிடித்தம், ஒப்பந்த ரத்து, (தகுதி நீக்கம் ) என கடும் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படவில்லை.
முறையற்ற பணிகளை செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது துறை விசாரணை எப்போது? மக்களின் வரிப்பணம் மீட்கப்படுமா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு மாநகராட்சி தெளிவான பதில் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்