நடைபாதை… கொடிப்பாதையா? – தூத்துக்குடியில் புதிய “அப்டேட்”!
தூத்துக்குடி: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அவரை வரவேற்கும் வகையில் சத்யா ரெஸ்டாரண்ட் தொடங்கி நகரின் முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் திமுக கொடிகள் கட்டப்பட்டு நகரம் முழுவதும் வரவேற்பு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
இது வரை எல்லாம் சரி தான். ஆனால் இதில் நடந்துள்ள ஒரு “ஸ்பெஷல் வேலை” தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
மாநகராட்சி அலுவலகம் முதல் குருஸ் பர்னாந்து சிலை வரை பொதுமக்கள் நடந்து செல்ல பல கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சி சார்பில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லவே இந்த நடைபாதை அமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த நடைபாதை கற்கள் மிஷின் மூலம் உடைக்கப்பட்டு, அதற்குள் இரும்பு ராடுகள் பதிக்கப்பட்டு, அதன் உள்ளே பைப் பொருத்தி அதில் திமுக கொடிகள் கட்டப்பட்டுள்ளது..
இதற்கிடையில், முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த சாரு ஸ்ரீ காலத்தில், அண்ணா நகர் பகுதியில் நடைபாதை கல் உடைத்த பந்தல் உரிமையாளருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல், வி.இ.ரோட்டில் ஒரு ஹோட்டல் உரிமையாளர் நடைபாதை கல்லை உடைத்து பைப்லைன் பதித்ததற்காக அந்த ஹோட்டலுக்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்து 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது சுமார் சில கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபாதை கற்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதற்கு யார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்? யார் மீது புகார் அளிக்கப்படும்? அதற்கான இழப்பீடு தொகை யாரிடமிருந்து வசூலிக்கப்படும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
“சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்” என்பதை மாநகராட்சி நிர்வாகம் நிரூபித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதற்கிடையில் தூத்துக்குடி மக்களிடையே ஒரு காமெடி கேள்வி மட்டும் பரவலாக கேட்கப்படுகிறது: "நடைபாதை மக்கள் நடக்கதானா… இல்ல கொடி நிக்கதானா?”
செய்தியாளர் மு.மணிகண்டன்