கோயிலுக்குள் நுழைய தடை., தூத்துக்குடி சம்பவம்.!
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்பதால் கோயிலுக்குள் நுழைய தடையா? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தேசிய சமூக நீதி கட்சியினர்.!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மத்தியமான் விளை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (45), இவர் மத்தியமான் விளை, ஆறுமுகப்புரம், புதூர், பள்ளத்தூர் ஆகிய ஊர்களுக்கு குடிமகனாக இருந்து வருகிறார். மேலும் பந்தல் தொழிலும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 10ந் தேதி கந்தசாமி மகன் சிறுவன் கோவில் முன்புள்ள படிக்கட்டில் இருக்கும் அங்கு வந்த குருசாமி மகன் செல்வகுமார் என்பவர் "நீ எங்கள் ஊர் குடிமகனின் மகன்" ஆகவே நீ கோவில் பக்கம் வரக்கூடாது என்று கூறியுள்ளார். உடனடியாக ஊர் தலைவராக இருக்கக் கூடிய ஆறுமுக நயினார் என்பவரிடம் எடுத்துக் கூறிய போது ஊரில் உள்ள அனைவரையும் வரவழைத்து ஊர் கூட்டம் நடத்தி அந்த கூட்டத்தில் கந்தசாமி குடும்பத்தை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி குடும்பத்தோடு அழித்து விடுவோம் என்றும் மிரட்டியதாக தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியரிடம் தேசிய சமூக நீதி கட்சி தலைவர் வெங்கடேஷ் குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர்.
அப்போது, இந்த வன்கொடுமை சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், தென் மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகளும், ஆணவ படுகொலைகளும் அரங்கேறும் இந்த சூழலில் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இது போன்ற செயல்களை தடுக்காமல் துணை போவதாக கூறியும், தமிழக அரசு குலத்தொழிலை கட்டாயம் செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்துவதை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியும் திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் போது போலீசார் போராட்டக்காரர்களிடம் மரியாதை குறைவாக நடத்தியதால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீஷ் பக்குவமாக போராட்டக்காரர்களிடம் எடுத்துக் கூறி 100க்கும் மேற்பட்டோரை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றார்.