என்.டி.பி.எல் அனல் மின் நிலைய சாம்பல் கழிவால் கடல்வளம் பாதிப்பு.!

என்.டி.பி.எல் அனல் மின் நிலைய சாம்பல் கழிவால் கடல்வளம் பாதிப்பு.!

தூத்துக்குடி, அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன் வளம் அழிந்து வருவதாக அதிமுக மாநகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும், மீனவருமான புல்டன் ஜெசின் குற்றம் சாட்டியுள்ளார்.!

தூத்துக்குடி மன்னார் வளைகுடா பகுதியில் “அலையாத்தி காடுகள்” என அழைக்கப்படும் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. இக்காடுகள் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும், நண்டு, பண்டாரி, கொடுவாய் உள்ளிட்ட பல்வேறு மீன் இனங்கள் இக்காடுகளில் குஞ்சு பொரித்து வளர்ந்து பின்னர் கடலுக்கு இடம் பெயர்கின்றன.

இந்த நிலையில், அலையாத்தி காடுகளை ஒட்டி தூத்துக்குடி பகுதியில் என்.டி.பி.எல் (NTPL) அனல் மின் நிலையம், தமிழ்நாடு என்.எல்.சி (NLC) மற்றும் டான்ஜெட்கோ (TANGEDCO) ஆகிய மூன்று அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் சுடுநீரால் அலையாத்தி காடுகள் மெல்ல மெல்ல அழிந்து வருவதாக கூறப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் அருகிலுள்ள கடலில் நேரடியாக கலக்கப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்கள் செத்து மிதப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடற்கரையிலிருந்து சுமார் 3 கி.மீட்டர் தூரம் வரை இந்த சாம்பல் கழிவுகள் மிதப்பதாக கூறுகின்றனர். இதனால் கரையோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் நலிவடைந்த மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக ஆய்வுக்குழு அமைத்து கடற்கரையோரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, கடல்வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அனல் மின் நிலையங்களில் இருந்து வெளிவரும் சாம்பல் கழிவுகளை கடலில் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, மீனவர் புல்டன் ஜெசின் கூறும் போது, உயிரை பணயம் வைத்து மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றோம். கடந்த 5 வருடங்களாக சாம்பல் கழிவுகள் கலக்கிறது.. இதனால் மீன்வளம் அளிக்கிறது.. முன்னதாக ஒருநாள் கடலுக்கு சென்றால் ரூ.2000 முதல் ரூ.3000 வரை வருமானம் ஈட்டியவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக ரூ.500 சம்பாதிப்பதே கடினமாகிவிட்டது. 90 சதவீதம் அழிந்து விட்டது.

அலையாத்தி காடுகள் அழிந்தால் மீன் இனங்களும் அழியக்கூடும் என்பதால், அனல் மின் நிலைய கழிவுகள் கடலில் கொட்டப்படாமல் பாதுகாக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்..

செய்தியாளர் மு.மணிகண்டன்