குடிநீர் தட்டுப்பாடு குறித்த மேயர் சொன்ன அந்த வார்த்தை., என்ன???
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரின் 60 வார்டுகளுக்கும் வல்லநாடு ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்டுள்ள நான்கு உறை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக மாநகரின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் தாமதமானது.
இதுகுறித்து மேயர் ஜெகன் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த 2-வது மற்றும் 3-வது குடிநீர் குழாய்கள், உறைகிணறுகள் மற்றும் பம்பிங் நிலையங்களை சீரமைக்க தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அந்த நிதியில் நவீன வசதிகளுடன், வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் உயரமான தூண்களில் புதிய பம்பிங் நிலையமும் குழாய் அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாத வகையில் வல்லநாடு பம்பிங் நிலையம் மற்றும் உறைகிணறுகளை நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி தற்போது 2-வது குழாய் வழியாக 100 சதவீதம் குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது.
மேலும், 3-வது குழாய் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவை இன்னும் 10 நாட்களில் நிறைவடையும். தற்போது வல்லநாடு ஆற்றில் நீர்வரத்து குறைவாக இருந்தாலும், மாற்று நடவடிக்கைகள் மூலம் மாநகருக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், தாமதமான பகுதிகளுக்கும் அடுத்த இரண்டு நாட்களில் வழக்கம்போல் விநியோகம் சீராகும்..
"வரும் ஆகஸ்ட் மாதம் வரை தூத்துக்குடி மாநகரில் குடிநீர் பிரச்சனை இருக்காது. அதன்பிறகு மழைக்காலம் தொடங்குவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. கடந்த 10 நாட்களாக ஏற்பட்ட குடிநீர் தாமதத்தை சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த முயன்றதாக குறிப்பிட்ட அவர், முன்கூட்டியே அறிவித்தபடி கடந்த சனிக்கிழமை முதல் குடிநீர் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது.
மேலும், தூத்துக்குடி மாநகரில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் அடுத்த கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் தெரிவித்தார்.
செய்தியாளர் மு.மணிகண்டன்