“12ஆம் வகுப்பு மாணவி கொலை வழக்கு: இன்று ‘நல்ல செய்தி’ – போலீஸ் தகவல்.!

“12ஆம் வகுப்பு மாணவி கொலை வழக்கு: இன்று ‘நல்ல செய்தி’ – போலீஸ் தகவல்.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்புராஜ் மற்றும் அவரது மனைவி காளீஸ்வரியின் இளைய மகள் தூத்துக்குடி குறுக்கு சாலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 10ஆம் தேதி மாணவி காணாமல் போன நிலையில், மறுநாள் மதியம் பல்வேறு இடங்களில் காயங்களுடன் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று சனிக்கிழமைக்குள் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் இதுவரை போலீசார் அவர்களை கைது செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (சட்டம்-ஒழுங்கு) டாக்டர் மகேஸ்வரர் தயாள், மதுரை தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி, டிஐஜி சரவணன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆகியோர் நேற்று (14.03.2026) சனிக்கிழமை மாலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்கள் பேட்டி எடுக்க காத்திருந்தபோது, “நாளை அதாவது இன்று (15.03.2026) ஞாயிற்றுக்கிழமை ஒரு நல்ல செய்தி இருக்கும். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திப்போம்” என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டார்களா? அவர்கள் இன்று சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், மாணவியின் உறவினர்கள் இன்றுடன் 5வது நாளாகவும் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து காத்திருக்கின்றனர்.