தூத்துக்குடியில் மனதை நெகிழச் செய்த நிகழ்வு – தேசியக் கொடி மரியாதையில் நின்ற நாய்க்குட்டி.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாலை மனதை நெகிழச் செய்த ஒரு சிறிய நிகழ்வு அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
பொதுவாக, இந்திய தேசியக் கொடி, விதிகளின்படி சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே பறக்கவிடப்பட வேண்டும். அதன் அடிப்படையில் மாலை நேரத்தில் அரசு அலுவலகங்களில் கொடி இறக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அதேபோல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் இன்று (14.03.2026) மாலை சுமார் 6.00 மணியளவில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அந்த நேரத்தில் மரியாதை உணர்வை வெளிப்படுத்தும் இசை ஒலிக்கப்பட்டது. இசை ஒலிக்கத் தொடங்கியதும் அங்கு பணியில் இருந்த போலீசார் அனைவரும் கொடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் அட்டென்ஷன் நிலையில் நின்று கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு சிறிய நாய்க்குட்டி திடீரென நின்று கொண்டது. போலீசார் அனைவரும் அட்டென்ஷன் நிலையில் நின்று கொண்டிருப்பதைப் போலவே, அந்த நாய்க்குட்டியும் சில நொடிகள் அசையாமல் நின்றது.
இந்த எதிர்பாராத காட்சி அங்கு இருந்தவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், அனைவரையும் ஒரு நிமிடம் ஆச்சரியப்பட வைத்தது.
இந்த நிகழ்வு போலீசார் மத்தியில் சிரிப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது...
செய்தியாளர் மு.மணிகண்டன்