“மௌன விரத” மாமன்றமா? எதிர்க்கட்சியின் ‘எதிர்ப்பு’ எங்கே? “வந்த வரைக்கும் லாபம்” அரசியல்?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகளைக் கொண்டுள்ளது. 2022 உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின்படி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து மேயராக ஜெகன் (திமுக) துணை மேயராக ஜெனிட்டா (திமுக) ஆகியோர் மார்ச் 2022 முதல் பொறுப்பேற்று மாமன்ற கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 46 மாதங்களாக நடைபெற்ற மாமன்ற கூட்டங்களில், பல உறுப்பினர்கள் தங்களது வார்டு பிரச்சனைகள் குறித்து வாய்திறந்ததே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
60 உறுப்பினர்களில் மேயர், துணை மேயர் தவிர 58 பேர். இதில் பாதிக்கு மேற்பட்டோர் "நாங்கள் வந்தோம். உட்கார்ந்தோம். கையெழுத்திட்டோம்.. சென்றோம்." என்ற பாணியில் கூட்டங்களில் பங்கேற்றதாக மக்கள் விமர்சனத்தை முன் வைக்கின்றனர்..
எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களே பிரச்சனைகளை முன்வைக்க வேண்டிய நேரத்தில் அங்கு கூட அமைதியே நிலவியதாக கூறப்படுகிறது. அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள், 10வது வார்டு- பத்மாவதி, 35வது வார்டு-வீரபாகு, 57வது வார்டு-ஜெயலட்சுமி, 59வது வார்டு-எஸ்.பி.எஸ் ராஜா, 52வது வார்டு-வெற்றி செல்வன், 51வது வார்டு-மந்திரமூர்த்தி.. இவர்களில் மந்திரமூர்த்தி மட்டும் தான் மாதந்தோறும் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து பேசி வருகின்றார்.
அதிமுக மாவட்ட செயலாளரின் மகன் எஸ்.பி.எஸ். ராஜா கூட்டத்திற்கு வருவதே கிடையாது. இறுதியாக வந்து ஓர் கையெழுத்து போட்டவுடன் மின்னல் வேகத்தில் வெளியேறிவிடுவது அவரது தனிச்சிறப்பு.. கையெழுத்து போடுவது கடமை, கூட்டத்தில் உட்காருவது விருப்பம்! என்ற புதிய கோஷத்தை அறிமுகப்படுத்தியவர் இவரே என்று பேசி கொள்கிறார்கள்..
வீரபாகு ஆடிக்கு ஒரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை என்ற கால அட்டவணையில் தோன்றி, தாம் தூம் என முழக்கமிட்டு சூழலை சூடேற்றி விட்டு மறைந்து விடுவார். மற்ற வார்டுகளில் மற்ற சிலர் “மௌனமே மொழி” என்ற கொள்கையில் செயல்படுகிறார்கள். கூட்டத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு, பெயர் கூறினால் மட்டும் தலை அசைப்பது இவர்களின் அரசியல் பாணி என உள்ளூர் மக்கள் சிரிக்கின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு, சாலை சேதம், வடிகால் பிரச்சனை, தெருவிளக்கு பழுது என பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வரும் நிலையில், மாநகராட்சிக்குக் கொண்டு செல்ல யாரும் இல்லையா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆளுங்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரபோஸ் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கூட்டங்களில் தங்களது வார்டு பிரச்சனைகளை அவ்வபோது எடுத்து சுட்டிக்காட்டியும், அது நிறைவேற்றப்பட்டால் கூட்டத்தில் நன்றி சொல்வதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளனர்.
திமுக உறுப்பினர்கள் கூட அவ்வப்போது மக்கள் பிரச்சனைகளை பேசி இருக்கின்றார்கள். அது போக கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கூட ஒரு தீர்மானத்திற்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினர்களே பொங்கி எழுந்ததை நாம் அறிவோம்..
ஆகவே, நடந்து முடிந்த 46 மாத மாமன்ற கூட்டங்கள் பிரச்சனை இல்லாத மாநகரமா? அல்லது பேசாத உறுப்பினர்களா?
அதுமட்டுமா, மாநகராட்சி அனுமதி இல்லாமல் பாதிக்கு மேற்பட்ட வார்டுகளில் குடிநீர் இணைப்புகள் சரளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீட்டர் இல்லாமல் நீர்… பதிவில்லாமல் வருவாய்… இழப்பை யார் எண்ணுவது? என்ற கேள்வி எழுகிறது.
இவை சில மன்ற உறுப்பினர்களின் துணையுடன் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. அதுபோல, மாநகராட்சி அனுமதி இன்றி பல குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும் தகவல். வரைபடம் இல்லாமல் வீடு, அனுமதி இல்லாமல் மாடி-ஆனால் வரி மட்டும் மாநகராட்சிக்கு வராத நிலை..
இதன் மூலம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என கூறப்படுகிறது. இவை எல்லாம் உண்மையா? வதந்தியா? இதற்கு மாநகராட்சி மேயர் பதில் அளிக்க வேண்டும்.
தூத்துக்குடி மக்களின் பார்வை அடுத்த தேர்தலில் என்ன தீர்ப்பளிக்கும் என்பது காத்திருக்கிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்
செய்தியாளர் மு.மணிகண்டன்