விமானத்தில் சென்னைக்கு!” – கிராமத்து பள்ளி மாணவர்களின் சூப்பர் சுற்றுலா.!
தூத்துக்குடி: “விமானம் மேலே பறக்கும்னு மட்டும் தான் தெரியும்… அதுல நாம போவோம்னு நினைச்சதே இல்ல!” – இப்படி ஆச்சரியத்துடன் கூறிக்கொண்டே முதல்முறையாக விமானத்தில் பறந்த கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள்.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியத்தில் உள்ள கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மொத்தம் 107 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 21 மாணவர்கள் இன்று (மார்ச் 7) வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை பெற்றனர்.
பொதுவாக பள்ளி சுற்றுலா என்றாலே பேருந்து தான். ஆனால் இந்த மாணவர்கள் நேரடியாக விமானத்தில் சென்னைக்கு பறந்துவிட்டனர். தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து காலை 11.25 மணிக்கு இண்டிகோ விமானத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உட்பட 7 பேருடன் மாணவர்கள் புறப்பட்டனர்.
விமானத்தில் ஏறியதும் சில மாணவர்கள் ஜன்னல் இருக்கையை பிடிக்க போட்டி போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. “மேல இருந்து வீடெல்லாம் பொம்மை மாதிரி தெரிகுது!” என்று சிலர் ஆச்சரியப்பட்டனர்.
சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கல்விச் சுற்றுலாவில் மாணவர்கள் பல முக்கிய இடங்களை பார்வையிட உள்ளனர். அதில் பிர்லா கோளரங்கம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை ஐ.ஐ.டி., கலங்கரை விளக்கம், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்கள், கோட்டை அருங்காட்சியகம், சென்னை ரயில் அருங்காட்சியகம், உயர்நீதிமன்றம், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல இடங்கள் இடம்பெற்றுள்ளன.
“விமானம் மட்டும் போதாதே” என்ற மாதிரி, சென்னை விமான நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை வரை மெட்ரோ ரயிலிலும் மாணவர்கள் பயணம் செய்ய உள்ளனர். சுற்றுலாவை முடித்து ஞாயிற்றுக்கிழமை இரவு தாம்பரம் – செங்கோட்டை விரைவு ரயிலில் தாம்பரத்தில் இருந்து பாவூர்சத்திரம் திரும்ப உள்ளனர்.
இந்த விமானப் பயணத்திற்கான முழுச் செலவையும் சென்னை டி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் டி. ஜெயசிங் வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு 2025 ஜனவரியிலும் இதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த 20 மாணவர்கள் மதுரையிலிருந்து சென்னை வரை விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் கூறுகையில், "கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் உலகத்தை பெரியதாக பார்க்க வேண்டும். விமானத்தில் பறப்பது அவர்களுக்கு ஒரு கனவு. அந்த கனவை நனவாக்கவே இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
இந்த சுற்றுலாவிற்கு சென்னையில் வாகனம் மற்றும் தங்குமிட வசதி ஏற்பாடு செய்த பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., எம்.எஸ்.பி.வி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.
விமானப் பயணத்திற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் தலைமையில் ஆசிரியர்கள் மீனாட்சி, வெனிஷ்டா பொன்சுதா, சகுந்தலா என்ற ராஜகனி, உமா மகேஸ்வரி, பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் தன்னார்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவி செய்தனர்.
“கிராமத்திலிருந்து நேரே மேகத்துக்கு!” என்ற மாணவர்களின் இந்த விமானப் பயணம் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செய்தியாளர் மு.மணிகண்டன்