தூத்துக்குடியில், 12ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.,!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் காளீஸ்வரி தம்பதியின் மூத்த மகள் குறுக்கு சாலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்..
இந்த நிலையில் மாணவி நேற்று மாலை வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த நிலையில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
இந்த அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் வேடநத்தம் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் இரவு முழுதும் ஈடுபட்டனர்.. இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதிக்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்..
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 6 க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சில நபர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது..
மேலும் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரது தந்தை கையெழுத்து போட்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி பிரேத பரிசோதனை கூடத்திற்கு மாணவியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது..
ஆனால், குற்றவாளியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாநகரின் மெயின் சாலையான விவிடி சிக்னல் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே தள்ளுமுள்ளு மற்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது..
இதனால் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
செய்தியாளர் மு.மணிகண்டன்