நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பற்றாக்குறை., கவனத்தை ஈர்த்த போராட்டம்.!
தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பற்றாக்குறை.., கண்டு கொள்ளாத அரசு.!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னக்காயல் கிராமமானது மீனவர்கள் வசிக்கும் பகுதியாகும். 10,500 மக்கள் தொகை கொண்டு 2,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தனி தீவு போல் அமைந்துள்ள இந்த கிராமத்தில் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் மீனவர்கள். ஆனால், இந்த கிராமத்தில் குடிநீர் பிரச்னையை எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை என்பது தான் மிக பெரிய குற்றசாட்டு.
சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'நமக்கு நாமே' திட்டம் மற்றும் 'ஜல்ஜீவன் திட்டத்தின்' கீழ் கிராம மக்களின் பங்களிப்புடன் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அந்தத் திட்டமும் வீணாகி போய்விட்டதாக குமுருகின்றனர் அந்த கிராம வாசிகள்.
அதுவும் இந்த 3 கோடி ரூபாயில், 1 கோடி ரூபாய் கப்பல் மாலுமிகள் நல சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ளதாம். இந்த 1 கோடி ரூபாய்க்கு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி இருந்தாலே குடிநீர் பிரச்னையை தீர்த்து இருக்கலாம், ஆனால் 3 கோடி ரூபாய்க்கு திட்டம் செயல்படுத்தப்பட்டும் குடிநீர் வரவில்லை என்பது தான் இந்த கிராம மக்களின் ஆதங்கமாக உள்ளது. இதன் பின்னால் உள்ள மர்மம் என்ன என்றும் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர் கிராமவாசிகள்.
40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதால் அந்தந்த வீடுகளின் முன்பு பெரிய, பெரிய சேமிப்பு கலன்கள் மூலம் நீரை சேமித்து வருகின்றனர். மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்கின்ற இந்த மக்கள் தண்ணீருக்காக படும் பாடு பெரும் துயரமாகவே இருக்கிறது.
மேலும், இந்த புன்னக்காயல் மீன்பிடி கிராமமானது தாமிரபரணி ஆற்றின் கடைசி முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ளது. இங்குதான் தாமிரபரணி ஆறு இறுதியாக கடலில் கலக்கிறது. இவர்களது குடியிருப்பு பகுதியில் மிக அருகில் சுமார் 300 மீட்டர் தொலைவில் தான் தாமிரபரணி ஆறு உள்ளது, இருந்தும் இந்த கிராமத்திற்கு குடிநீர் இல்லை என்பது தான் வேதனையிலும் வேதனை,
மேலும், இந்த கிராம மக்கள் குடிநீர் வசதி கேட்டு சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ஒரு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இருந்தும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்பதால் இன்று சுமார் 2, 000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.