பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு சுவர் ஓவியங்களை அட்டகாசமாக வரைந்த மகளிர் கல்லூரி மாணவிகள்.!
தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரையும் பணியில் ஈடுபட்ட மகளிர் கல்லூரி மாணவிகள்.!
நாட்டில் பெண் சிசுக்கொலை மற்றும் பாலின பாகுபாட்டை ஒழித்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டில் பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதை உறுதி செய்து அதிகாரம் உள்ளவர்களாக மாற்றும் வகையில் மத்திய அரசு பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம் என்ற ஒரு முழக்கத்தையும் மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக அரசோடு இணைந்து தூத்துக்குடி ஜேசிஐ குயின் பீஸ் என்ற பெண்கள் அமைப்பு தூத்துக்குடி மாநகரில் கலர் ஓவியங்கள் மூலமாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
தூத்துக்குடி மாநகரிலுள்ள டூவிபுரம் பகுதியில் இன்று இந்த விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் இந்த இயக்கத்தின் தலைவர் அஜிதா பிரபு தலைமையில், ஜேசியை என்ற அமைப்பின் மண்டல துணைத் தலைவர் பால் நாயகம் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பாதுகாப்பு தூத்துக்குடி மாவட்ட அலுவலர் அனுசியா தொடங்கி வைத்த நிலையில், திருச்சிலுவை மகளிர் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினர். தொடர்ந்து பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா கூறும்போது., தமிழகத்தில் பெண்களை பாதுகாப்பதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வழிகாட்டுதலின் பெயரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பெண் குழந்தைகள் படித்து முன்னேற்றம் அடைவதன் மூலமாக சுதந்திரமாக தனித்துவமான முறையில் செயல்பட முடியும். இதன் மூலம் பெண் குழந்தைகளை சுமையாக கருதுவது குறைந்துள்ளது. பெண் குழந்தைகளுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இது போன்ற விழிப்புணர்வு-களையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
நிகழ்ச்சியில், தேசிய பெண்கள் அமைப்பைச் சார்ந்த சுபாஷினி வில்சன், ஜெர்லின், ஆயிஷா பர்வீன், ஜோஸ்பின் பிரபா, திருச்சிலுவை மகளிர் கல்லூரி பேராசிரியை மதுரவல்லி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.