தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி சாலை தரமா? மக்கள் கொந்தளிப்பு! மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் ஒப்பந்ததாரர்?

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி சாலை தரமா? மக்கள் கொந்தளிப்பு!  மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் ஒப்பந்ததாரர்?

தூத்துக்குடி பண்டுகரை சாலை தரமற்ற நிலையில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. மாநகராட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் ஒப்பந்ததாரர் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா? மக்கள் எதிர்பார்ப்பு!

தூத்துக்குடி மாநகராட்சி 3ம் மைல் பக்கிள் ஓடை பாலம் முதல் திரேஸ்புரம் பக்கிள் ஓடை வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுதர்சன் என்ற ஒப்பந்ததாரர் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பண்டுகரை சாலை என்று அழைக்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகரின் பிரதான சாலையான தமிழ்சாலை மற்றும் வஉசி சாலையில் இருந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சி இந்த மாற்று சாலையை அமைத்தது.

இதன் மூலம் 3வது மைல் முதல் திரேஸ்புரம் வரை வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை அமைக்கப்பட்ட பின் தூத்துக்குடி மாநகரின் பிரதான சாலையான தமிழ்சாலை, வஉசி சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறைந்தது. ஆனால் தற்போது இந்த பண்டுகரை சாலையானது சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து வெறும் ஜல்லிக்கற்கள் முழுவதும் வெளியே தெரிந்து குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது..

மேலும், இந்த சாலையில் பயணம் செய்தால் முதுகு வலி, உடம்பு வலி, வாகன சேதம், விபத்து அபாயம், போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவது நிச்சயம். போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கும் இந்த சாலையை ஒப்பந்ததாரர் கண்டு கொள்ளாது தான் வேதனையிலும், வேதனை.

ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி, மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலையை செப்பனிட வேண்டும், தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், வாகன ஒட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்..

செய்தியாளர் : மு. மணிகண்டன்